ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவியில் உள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாஜக அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சச்சின் பைலட் மாநில அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த பாஜக அரசின் ஊழல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் பைலட் அறிவித்து இருந்தார்.
அதன்படி, இன்று ஜெய்ப்பூரில் உள்ள ஷாகீத் சமர்க்கில் தனது ஆதரவாளர்களுடன் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் சச்சின் பைலட் ஈடுபட்டு இருக்கிறார். கட்சி தலைமையின் எச்சரிக்கையையும் மீறி சச்சின் பைலட் மேற்கொண்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம், அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.