நம் தாய் திருநாட்டின் 74-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. முப்படைகளின் அணிவகுப்புடன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இந்த அணிவகுப்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டும் இந்திய ராணுவம் காட்சிப்படுத்த பட உள்ளது.
கப்பல்படை அணிவகுப்பை பெண் அதிகாரி தலைமையில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கப்பற்படை அணிவகுப்பில் 144 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் பிஎஸ்எப் அணி வகுப்பில் பெண்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்தியாவின் முப்படைகளில் இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட அக்னிவீரர்களும் இந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.
பல்வேறு அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள இருக்கின்றன.
மேலும் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய அலங்கார ஊர்திகளில் 17 ஊர்திகள் குடியரசு தின விழாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊர்திகள் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த குடியரசு தின விழாவில் எகிப்து நாட்டின் அதிபர் படாக் அல்-சிசி கலந்து கொள்ள இருக்கிறார். மேலும், எகிப்து நாட்டின் ராணுவத்தினரும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். சுமார் 120 எகிப்து ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.
இந்த அணிவகுப்பு குறித்து மேஜர் ஜெனரல் பவ்னீஸ் குமார் கூறுகையில், இந்த ஆண்டு அணிவகுப்பு ’ஆத்மநிர்பார் பாரத்’ என்பதை அடிப்படையாக கொண்டு வடிவமைத்து இருக்கிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களையே முழுவதும் காட்சிப்படுத்த இருக்கிறோம். ராணுவத்திலிருந்து 6 படைகளும் கப்பற்படை, விமானப்படையிலிருந்து தலா ஒரு படைகளும் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளன” என்று தெரிவித்தார்.