தலைநகர் தில்லி நங்லோய் பகுதியைச் சேர்ந்த பதினொரு வயது சிறுமி ஒருவர் கடந்த 9ம் தேதி திடீரெனக் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக அவரது தாய், ‘எனது மகள் கடந்த 9ம் தேதி காலை பள்ளிக்குச் சென்றாள். அவள் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. அதனால் அவளைக் கண்டுபிடித்துத் தாருங்கள்’ என போலீசில் புகார் கொடுத்தார். மேலும், அவர், ‘அன்று மதியம் எனது செல் போனுக்கு மிஸ்டு கால் ஒன்று வந்தது. அதன் பின் நான் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, அந்த போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பெண் சொன்ன தகவலை வைத்துக்கொண்டு போலீசார் சுமார் பன்னிரெண்டு நாட்கள் பலரிடமும் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பதுங்கி இருந்த இருபத்தியோரு வயதான ரோஹித் என்கிற வினோத் என்ற இளைஞனை கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் தாம்தான் அந்தச் சிறுமியைக் கடத்தி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு இருக்கிறான். அதோடு, கொலை செய்யப்பட்ட அந்தச் சிறுமியின் உடலை வீசிய இடத்தையும் போலீசாரிடம் அடையாளம் காட்டி இருக்கிறான்.
அவன் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் அந்தச் சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுமியின் கொலை எதற்காக நடந்து என்பது பற்றி போலீசார் இதுவரை உறுதியாக எதையும் கூறவில்லை. அதோடு, அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா என்கிற தகவலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே தெரியவரும். கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து போலீசார் விசாரணையில் இருக்கிறான்.