அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலையடுத்து , அவருக்கு புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான எண் 1440 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.
அவரது வீடு உட்பட சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
நேற்று செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவ மனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து நீதி மன்ற காவலில் வைப்பதற்கான உத்தரவை ரத்து செய்வது தொடர்பான மனு, ஜாமீன் மனு உடனே நீதிமன்ற அறையில் விசாரிக்கப்பட்டது. பின்னர் அதுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத் துறை தீவிரமாக முயன்று வந்தது.
விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் 1440 வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றிலும் ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.
மேலும், விசாரணைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் பின்பற்றப் படும் என்பதால், அவரை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லை. இருப்பினும், அவ்வாறு அவரை பார்க்க வேண்டும் என்றால், சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்புதான் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.