செய்திகள்

பேனா நினைவுச் சின்னம் திட்டமும்...தொடரும் சர்ச்சைகளும் ...!

கல்கி டெஸ்க்

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடம் அருகே பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சுனாமி, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன் கூட்டியே கண்டறியும் கருவிகளுடனும் அமைகிறது. மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி சிலை கட்டமைப்பை முன்மாதிரியாக கொண்டு அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சின்னம் மு.கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் கடலில் பேனா நினைவுச் சின்னம் என்கிற பெயரில் அமைக்கப்படுகிறது. அந்த பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலம் அமைக்கப்படும். இந்த பாலம் தரையின் மேல் 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் தூரம் இருக்கும்.

முதல்வர் ஸ்டாலின்

இந்த சிலை விவகாரம் குறித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அனைத்துவிதமான ஒப்புதல்களும் பெற்ற பிறகே பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.

பேனா நினைவுச் சின்னம் கடலில் அமைவதால், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவும் வேண்டும். இதன்படி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஜனவரி 31ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆதரவு மற்றும் பல்வேறு எதிர்ப்பு குரல்களும் கருத்துகளும் பலமாக எழுந்தன.

இது குறித்து ’எதிர்ப்புகளை மீறி பேனா நினைவுச் சின்னத்தை கடலில் வைத்தால், ஒரு நாள் அதை உடைப்பேன்’ என்று சீமான் பேசியது சர்ச்சைத் தீயைப் பற்ற வைத்தது. கூட்டத்தில், வாக்குவாதமும் ஏற்பட்டது. இது பேனா சிலை திட்டம் குறித்து பொது மக்கள் பலரும், எதிர் கட்சியினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான கருத்துகளும் அதனால் எழுந்து வரும் சர்ச்சையும் இந்த அளவிற்கு இருக்கும் என்றும் முதலமைச்சர் உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகையால், சர்ச்சையை தவிர்க்கும் வகையில், திட்டத்தை கைவிடலாமா? அல்லது தற்காலிகமாக ஒத்தி வைக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT