தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாகவே காலை, மாலை வேளைகளில் மிதமான மற்றும் கன மழை பெய்து வருகிறது. அப்படி கோவை மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மாலை வேளைகளில் ஒரு மணிக்கும் மேலாக மழை பெய்து வருவது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், இன்று கோவை மாவட்டம், தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது சிறிய அளவிலான ஐஸ் கட்டிகள் போன்று வானில் இருந்து விழத் தொடங்கியது. இந்த ஆலங்கட்டி மழையை கோவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இந்த ஆலங்கட்டி மழையில் நனைந்தும், ஆலங்கட்டிகளை சேகரித்தும் சிறுவர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
கோவை மாவட்டத்தின், இடையர்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இப்படி ஆலங்கட்டி மழை பெய்திருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் சந்தோஷத்துடன் தெரிவித்தனர். இந்த ஆலங்கட்டி மழையின்போது பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால் அப்பகுதியில் இருந்த மரங்கள் காற்றில் பலமாக ஆடியதைக் கண்டு மக்கள் கலக்கம் அடைந்தனர். இங்கு பெய்த பலத்த மழையால் இப்பகுதி சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.