செய்திகள்

முதல் நாளிலேயே செங்கோல் வளைந்து விட்டது - முதல்வர் ஸ்டாலின்!

கார்த்திகா வாசுதேவன்

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதன் மூலம் முதல் நாளிலேயே செங்கோல் வளைந்துவிட்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்துள்ளாா்.

மல்யுத்த வீரங்கனைகளும் மற்றும் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தரும் வீரர்களும் இணைந்து நேற்றைய தினம் (28ம் தேதி) புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவின்போது,மிகப்பெரிய அளவில் முற்றுகை போராட்டம் நடத்த முன்னரே முடிவு செய்திருந்தனர் . இதில் ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்திய மல்யுத்த வீர்ர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று கோரியும், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறும் ஆயிரக்கணக்கானோர் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் போராட்டம் நடத்தினர்.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனா, சாக்ஷி மாலிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினீஷ் போகட் உள்ளிட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்று ஒருமித்த குரலில் அவர்கள் கோரினர்.

ஆனால், நாடாளுமன்றத் திறப்புவிழாவை நாளான நேற்று, பாதுகாப்புக் காரணிகளைக் காரணம் காட்டி மத்திய அரசு இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரங்கனைகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

மத்திய அரசின் உத்தரவின் பேரில் நடந்த இச்செயலை விமர்சித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில்;

“பாஜக நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாா் சொல்லிப் பல மாதங்கள் ஆகி விட்டன.

அவா் மீது இதுவரை கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடா்ந்து தலைநகரில் போராடி வருகின்றனா்.

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவின் போது, போராட்டம் நடத்தியவா்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

செங்கோல் முதல் நாளிலேயே வளைந்து விட்டது என்பதையே இந்த கைது நடவடிக்கை காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிா்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்பு விழா நாளில் அராஜகமும் அரங்கேறுவது அறமா”

- என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT