செய்திகள்

பணத்தை பதுக்கிய புத்திசாலி எலியும் தடுமாறிய பழக்கடை உரிமையாளரும்!

சேலம் சுபா

ழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்ற சொலவடையைக் கேள்விப்பட்டுள்ளோம். இனி எலிக்குத் தெரியுமா பணத்தின் அருமை என்று கேட்டு, தெரியும் என்று திருப்பூர் எலியைக் கை காட்டலாம். ஆம் மான்ஸ்டர் எனும் திரைப்படத்தில் எலியின் அட்டகாசங்களைக் கண்டு எலி போய் இப்படி எல்லாம் செய்யுமா? என்று பார்த்து ரசித்தோம். ஆனால் எலி ஒன்று  பணத்தை எடுத்து பதுக்கி வைத்த இந்த சுவையான செய்தியைப் பார்க்கும்போது இனி புத்திசாலி எலிகளிடம் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.


திருப்பூர் மத்திய பேருந்து  நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை வைத்துள்ளார். தினமும் இரவில் கடையை சாற்றும் முன்  கல்லாப்பெட்டியில் சிறிதளவு பணம் வைத்து செல்வது அவர்  வழக்கம். ஆனால் எப்போதும் மறுநாள் காலையில் கடைக்கு வந்து கல்லாப்பெட்டியைத் திறந்து பார்த்தால் அதில் வைத்திருந்த 10, 50, 100 ரூபாய் நோட்டுகள் காணாமல் போனது தெரிந்தது. தினசரி இப்படி நடப்பதால், இது எப்படி நடந்திருக்கும் என்று யோசித்த மகேஷ் அதைக் கண்டுபிடிக்க தனது கடையில் கேமராவைப் பொருத்தியுள்ளார்.

நேற்று காலை கடைக்கு வந்த மகேஷ் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். காரணம்  ஒரு எலி. ஆம். அதிகாலையில் கல்லாப்பெட்டி மேஜை அருகே எலி ஒன்று அசால்டாக வந்து சிறிய பிளாஸ்டிக் கூடையில் இருந்த 10, 50, 100, ரூபாய் நோட்டுக்களை மட்டும் வாயால் கவ்விக்கொண்டு மேஜைக்கு அடியில் ஓடுகிறது. இத்தனை பழங்கள் இருக்க அதை உண்ணாமல் பணத்தை மட்டும் கரெக்ட்டாக எடுத்துச் சென்ற எலியைத் தேடும் பணியில் மகேஷ் ஈடுபட்டார். கடைக்குள் இருந்த பழங்களை வெளியே வைத்துவிட்டுப்  பார்த்தபோது ஓரிடத்தில் எலி பதுங்கி இருந்ததைக் கண்டு பிடித்தார்.

மகேசை பார்த்ததும் எலியும்  ஓட்டம் பிடித்தது. அந்த இடத்தில் காணாமல் போன ரூபாய் நோட்டுகள் குவிந்து இருந்தன. அந்த நோட்டுகளை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூபாய் 1500 இருந்தது பசிக்கு பழங்களைத் திருடாமல் பணத்தை மட்டும் அழகாக தூக்கி சென்று பதுக்கி வைத்த எலியை நினைத்து  அதிர்ச்சி அடைந்தாலும் எடுத்துச் சென்ற பணம் எதையும் அந்த எலி சேதப்படுத்தவில்லை என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டார் மகேஷ். சினிமாக்களில் எலியின் சேட்டைகளைப் பார்த்து சிரித்துச் சென்ற நமக்கு  இந்த எலியின் உண்மையான பணப்பதுக்கல் மிகுந்த ஆச்சர்யத்தை தருகிறது.  

 திருப்பூர் பழக்கடையில் தினமும் பணத்தை எடுத்து உரிமையாளரின் தலையை சுற்ற வைத்த சம்பவம் மக்கள் மத்தியில் நகைச்சுவையை  ஏற்படுத்தினாலும் மகேஷின் கடை திடீர் புகழைப் பெறக் காரணமாக இருந்த எலியின் புத்திசாலித்தனத்தை பாராட்டலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT