ஒரிருவர் 95 சதவீத மதிப்பெண்கள் பெறுவதை விட நிறைய பேர் 80 சதவீத மதிப்பெண்கள் பெற வைப்பதுதான் சாதனை.
தமிழகம் முழுக்க பொதுவிடங்களில் திரும்பும் திசையெங்கும் பள்ளிகளின் போஸ்டர்கள், பேனர்களை பார்க்க முடிகிறது. தங்கள் பள்ளியில் படித்து முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், டெல்டாவின் ஒரு குட்டி ஊரில் இருந்தபடி கடந்த 80 ஆண்டுகளாக 80 சதவீத மதிப்பெண்களோடு மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதில் ஒரு பள்ளி தனிக்கவனம் செலுத்துவது நிஜமாகவே அதிசயம்தான்.
சமீபத்தில் திண்டுக்கல்லில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த நந்தினி என்னும் மாணவி பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. பிளஸ் டு தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெறுவது இதுதான் முதல் முறை என்றாலும் பத்தாம் வகுப்புத் தேர்வில் ஏற்கனவே சில முறை நடந்திருக்கிறது. 2014ல் முதல் முறையாக 500க்கு 500 மதிப்பெண்கள் பெற்று மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்குபவர்கள் ஒரிருவர்தான் இருப்பார்கள். இத்தகைய மாணவர்கள் மட்டுமே புகழ் வெளிச்சத்திற்கு வருகிறார்கள். 80 சதவீதத்திற்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெற்று, உயர்கல்வியில் சேர்ந்து பல்வேறு துறைகளில் சாதிப்பவர்களை பற்றி யாரும் பெரிய அளவில் பேசுவதில்லை.
சீர்காழியில் உள்ள சபாநாயக முதலியார் பள்ளி, நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே செயல்பட்டு வருகிறது. ஏராளமான திறமையான மாணவர்களை உருவாக்கியிருப்பதோடு, பல்துறைகளுக்கும் பங்களிப்பை செய்திருக்கிறது. சீர்காழி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மாணவர்களை சாதனையாளர்களாக்கிட அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. 80 ஆண்டுகாலமாக ஏராளமான மாணவர்களை உருவாக்கி பெரும் சாதனை படைத்திருக்கிறது என்கிறார்கள்.
இங்கே பத்தாம் வகுப்பில் முதல் மாணவர்களாக வருபவர்களின் பெயர், அவர்கள் பெற்ற மதிப்பெண்களை அறிவிப்புப் பலகையில் எழுதிவைக்கும் நடைமுறையை 50 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்கள். மதிப்பெண்களையும் அவர்கள் தேர்ச்சி பெற்ற ஆண்டையும் பார்க்கும்போது பல சுவராசியமான தகவல்கள் கிடைக்கின்றன.
1940ல் ரெங்கநாதன் என்னும் மாணவர் 500க்கு 397 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். இன்று அவர் நம்மோடு இருந்தால் நூறு வயதை கடந்திருப்பார். 1940 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் முதல் மதிப்பெண்கள் எடுத்தவர்களில் யாரும் 500க்கு 400 பெற்றிருக்கவில்லை. அதாவது 80 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களே பள்ளியில் முதலிடத்தில் வந்திருக்கிறார்கள். 1947 முதல் 1976 வரையிலான காலகட்டத்திலும் அதிகமான மாணவர்கள் 80 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
இதே நிலை 40 ஆண்டுகளாக தொடர்கிறது. நடப்பாண்டான 2023ல் 500க்கு 430 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் பள்ளியில் முதல் இடம் பெற்றிருக்கிறார்.
ஏறக்குறைய 80 ஆண்டுகளாக முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் மதிப்பெண்கள் 80 சதவீதம் முதல் 86 சதவீதம் வரை இருந்திருக்கிறது.
ஒரிரு மாணவர்கள் 95 சதவீத மதிப்பெண்கள் பெறுவதை விட பெரும்பாலான மாணவர்கள் 80 சதவீத மதிப்பெண்களை பெறும் பள்ளியைத்தான் சிறந்த பள்ளியாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார்கள், கல்வியாளர்கள். சீரான வளர்ச்சியை விட பரந்துபட்ட அளவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிதான் சிறப்புக்குரியது என்றும் விளக்கமளிக்கிறார்கள்.
எங்களிடம் படிக்கும் மாணவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம். அதற்கு மேல் மதிப்பெண்கள் பெறுவது என்பது மாணவர்களின் கடுமையான உழைப்பு, பெற்றோர்களின் ஆதரவைப் பொறுத்தது. மாணவர்கள் டிப்பதற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்கி தந்து, வலுவான அடித்தளத்தை கட்டமைப்பதுதான் முக்கியமானதாக நினைக்கிறோம் என்கிறார்கள்.
படித்துவிட்டு மறக்காமல் ஷேர் செய்யுங்கள். ஒருவேளை 50 ஆண்டுகளுக்கு முன்பு சாதித்துக் காட்டிய தாத்தா, பாட்டிகளின் பேரனோ, பேத்தியோ அல்லது கொள்ளுப்பேரனோ, கொள்ளுப்பேத்தியோ உங்களுடைய நட்பு வட்டாரத்தில் இருக்கக்கூடும்.