செய்திகள்

குதூகலமாகக் குளிக்க ஆற்றில் இறங்கிய மாணவிகள்… காவு கொண்டது காவிரி ஆறு!

கார்த்திகா வாசுதேவன்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைப் பகுதியில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு அழைத்துச் சென்றிருந்தார். போட்டிகள் நிறைவடைந்த பின் மாணவிகள் கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கதவணையைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.

முதலில் மாயனூர் செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு பிறகு அங்கிருந்த காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி இருக்கின்றனர். ஆற்றில் ஆழம் அதிகமிருந்தது புதிதாக அங்கு குளிக்க இறங்கிய மாணவிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆற்றில் இறங்கிய மாணவிகளில் தமிழரசி, சோபிகா, லாவண்யா, இனியா எனும் நான்கு மாணவிகள் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை பிற மாணவிகள் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள் என்றாலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளைப் பற்றி தகவல் அறிந்த உள்ளூர் இளைஞர்கள் உடனடியாக உதவிக்கு வந்து ஆற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் ஆழம் அதிகமிருந்த காரணத்தால் அவர்களாலும் மூழ்கிய மாணவிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த மாயனூர் காவல்துறையினர் இவ்விஷயம் குறித்து அப்பகுதி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

புதுக்கோட்டை மற்றும் முசிறி தீயணைப்புப் படையைச் சேர்ந்தவர்கள் சுமார் 1 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்திய பிறகு ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவென சந்தோஷமாக சென்ற மாணவிகள் இப்படி ஆற்றில் குளிக்கச் சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆற்றில் ஆழம் அதிகமிருப்பின் உள்ளூர் மக்கள் அங்கே எச்சரிக்கை தடுப்பு எழுப்பி இருக்க வேண்டும். அல்லது புதிதாக ஆற்றில் இறங்குபவர்களை ஆற்றில் குளிக்கத் தடையாவது விதித்திருக்க வேண்டும். உரிய விதமாக பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இப்படி அப்பாவி மாணவிகளை இழந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மீண்டும் வருவாரா தோனி?

EPFO அறிமுகப்படுத்திய தானியங்கி முறையின் அம்சங்கள்!

IPL இறுதி கட்டத்தை நோக்கி இன்றைய மேட்ச்..! KKR (Vs) SRH – ஜெயிக்கப் போவது யாரு?

உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் சிறுவாணி பற்றி தெரியுமா?

உலகளந்த பெருமாள் கோயில் சிறப்புகள்- காஞ்சிபுரம்!

SCROLL FOR NEXT