நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார், வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண் குடியரசு தலைவரிடம் (ஜனாதிபதி திரௌபதி முர்மு) பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்காகச் சமர்ப்பித்துள்ளார் என்பது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கரத், பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஜனாதிபதி திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.
இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நிதி அமைச்சக அலுவலகத்திற்கு வருகை தந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் டிஜிட்டல் முறையில் அதாவது Paperless பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.