திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலைக்கு உட்பட்ட புதுார் நாடு பஞ்.நடுகுப்பம் மலை கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று மாலை திருப்பத்தூர் கிராமத்தில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 30க்கும் மேற்பட்டோர் மினி லாரி மூலமாக சென்றனர். மினி லாரியை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ராதாகிருஷ்ணன் ஒட்டிச் சென்றார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலை 4 மணி அளவில் மீண்டும் நடுகுப்பத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நடுகுப்பம் அருகே மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மலை கிராமங்களை சேர்ந்தவர்கள் டிரைவர் ராதாகிருஷ்ணன்(45) மற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் அங்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக இருவர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது.
முதலாவதாக புதூர் நாடு மலை கிராமத்தைச் சுற்றிலும் 36 குக் கிராமங்கள் உள்ளன. இதில் திருப்பத்தூரில் இருந்து புதூர் நாடு வரைக்கும் தான் ஓரளவுக்கு சுமாரான சாலை வசதி உள்ளது. புதூர் நாட்டிலிருந்து மற்ற கிராமங்களுக்கு செல்ல சாலை வசதிகள் கிடையாது.
மேலும் திருப்பத்தூரில் இருந்து புதூர் நாடு வரை காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களில் மட்டும் ஒரே ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற நேரங்களில் நகர் பகுதிகளுக்கு மலை கிராம மக்கள் வந்து செல்ல வேண்டும் என்றால் டூவீலர் அல்லது (கூட்டமாக வந்து செல்ல வேண்டும் என்றால்) இதுபோன்ற மினி லாரிகளில் தான் வந்து செல்வர். இதில் நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் மலை கிராமவாசிகளில் பலருக்கு லைசென்ஸ் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற நல்ல காரியங்களாக இருந்தாலும் சரி இறப்பு போன்ற கெட்ட காரியங்களாக இருந்தாலும் சரி மலை கிராம மக்கள் தங்களின் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் கீழே வந்து செல்கின்றனர்.
தேர்தலுக்கு தேர்தல் இங்கு செல்லும் அரசியல் கட்சியினர் சாலை வசதி கண்டிப்பாக அமைத்து தருவோம் என சத்தியம் செய்யாத குறையாக வாக்குறுதி அளித்து ஓட்டுகளை பெறுகின்றனர். ஆனால் அதன் பின்னர் மலைவாழ் மக்களை கண்டு கொள்வதில்லை.
இந்தப் பகுதியில் தரமான சாலை வசதி மட்டும் அமைத்துக் கொடுத்தால் விபத்து இல்லாத பயணங்களை மலைவாழ் மக்கள் மேற்கொள்வர். இந்த பகுதியில் பெரும்பாலான இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் சாலை அமைப்பதிலும் சற்று சிக்கல் இருக்கத்தான் உள்ளது. இருந்த போதிலும் மக்களின் அடிப்படைத் தேவை என்ற காரணத்தை வைத்து இவர்களுக்கு சாலை வசதி கண்டிப்பாக செய்து தர வேண்டும்.
சந்திரனுக்கு ராக்கெட் விடுவது மட்டுமல்லாமல் பூமியில் உள்ளவர்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தருவதும் அரசாங்கத்தின் பொறுப்பல்லவா?