திருவோணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பத்தினம் திட்டா மாவட்டம் ஆரண்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் நடைபெறும் ஓணம் பண்டிகைக்கான பூஜை பொருட்கள் மற்றும் பிரசாதங்களை ஏற்றிய திருவோணப் படகு நேற்று மாலை காட்டூரில் உள்ள மகாவிஷ்ணு கோயிலில் இருந்து புறப்பட்டது.
மீனச்சல், மணிமலா, பம்பா உள்ளிட்ட ஆறுகள் வழியாக திருவோணப் படகு இன்று காலை பார்த்தசாரதி கோயிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து பார்த்தசாரதி சாமிக்கு பிரசாதங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவோணம் பண்டிகையை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டும் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.குருவாயூர் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் கொடிமரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.