அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார். இதனையடுத்து வெற்றி உரை ஆற்றியிருக்கிறார் ட்ரம்ப்.
இந்த ஒருநாளுக்காகதான் ஒட்டுமொத்த உலக நாடுகளும் காத்திருந்தது. பல மாதங்களாக தேர்தலுக்கான ஏற்பாடுகளும் பிரச்சாரங்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இவருக்கு எதிராக கமலா ஹாரிஸ் களமிறங்கினார். இருவருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. பல சர்ச்சைகளுக்கு நடுவில் பிரச்சாரம் நடந்தது. ஒருமுறை பிரச்சாரத்தின்போது டொனால்ட் ட்ரம்பை சுட்டுக்கொல்லப் பார்த்தனர். ஆனால், தோட்டா அவரின் காதோரம் உரசி சென்றது. இதனால் அவர் நூழிலையில் உயிர்த்தப்பினார். இப்படியான சூழலில், தேர்தலும் வந்தது.
இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்று மீண்டும் அதிபரானார். இந்நிலையில், புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் உரையாற்றினார்.
அவர் பேசியதைப் பார்ப்போம், “இது அமெரிக்காவின் பொற்காலம். எங்களது பணி மற்றும் சேவை மூலம் அமெரிக்க மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் அந்த பொறுப்புக்கு சரியான தேர்வு. நாட்டின் முதல் குடிமகள் ஆகவுள்ள என் மனைவி மெலானியாவுக்கு வாழ்த்துகள். இந்த தேர்தலில் நமக்கு மிகவும் துணையாக இருந்த எலன் மஸ்க் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஒரு ஜீனியஸ். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம் பொறுப்பு. அவரைப் போலவே தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். பொறுப்பிற்கு வந்ததும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம். ராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம்.
உலகத்தின் மிக முக்கிய பணி இது. அதன் காரணமாக தான் இறைவன் எனது உயிரை காத்தார் என நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்று பேசினார்.