டீமானிடைசேஷன் சம்பவத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக கியூவில் நின்ற சம்பவம் சென்ற ஆண்டு நடந்தது. மின் இணைப்பு கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்கவேண்டியது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்த காரணத்தால் இ சேவை மையத்திற்கு முன்னர் மக்கள் குவிந்தார்கள்.
தமிழ்நாட்டில் 2.67 கோடி மின் இணைப்புகள் இருப்பதாகவும், அனைத்தையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஒருவேளை மின் இணைப்பு வீட்டின் உரிமையாளர் பெயரில் இல்லாமல் வேறு யாராவது பெயரில் இருந்தாலும் ஆதார் எண்ணை இணைக்கலாம். வீட்டில் குடியிருப்பவர்களும் தங்களுடைய ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துக் கொள்ளலாம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இணைப்புக்கான பணிகள் தொடங்கின. முதலில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பெரும்பாலான மக்கள் தயங்கினார்கள். ‘இணைக்காவிட்டால் மானியம் பாதிக்கப்படுமா? ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார இணைப்புகளை கொண்டிருக்கும் குடியிருப்புகளுக்கு தடை ஏற்படுமா? வீட்டின் உரிமையாளர் பெயரில் மின் இணைப்பு இல்லாவிட்டால் என்ன பாதிப்பு?’ இப்படி ஏகப்பட்ட கேள்விகள் எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசு உரிய விளக்கங்களை அளித்தது. மாநிலம் முழுவதும் 2,811 மின் அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டன. எனினும் 50 சதவீதம் மக்கள்தான் மின் இணைப்பு கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்க முன்வந்தார்கள்.
இதுவரை 1.96 கோடி மின் இணைப்புகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 70 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவூட்டல் செய்தியும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 31 வரை ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் நூறு சதவீதம் இணைப்புகள் ஆதார் எண்களுடன் தயாராகிவிடும் என்று தெரிகிறது. ஆனால், ஏற்கெனவே இணைப்பை செய்து முடித்தவர்களுக்கு கெட்ட செய்தியும் இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 4ந் தேதி முதல் 12ந் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்திருந்தார்கள். அதில் பெரும்பாலானவை தொழில்நுட்ப கோளாறால் மாயமாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
மின் இணைப்பு முகவரியில் குறிப்பிடப்பட்ட சில தகவல்கள் சேமிக்கப்படவில்லை. ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டதாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டிருந்தாலும் தகவல்கள் சர்வரில் சேமிக்கப்படவில்லை என்கிறார்கள். விடுபட்ட தகவல்களை மீண்டும் இணைப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் முயற்சி செய்தும், வெற்றி கிடைக்கவில்லை. விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்டவர்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மின் இணைப்பு ஒருவரது பெயரிலும், ஆதார் எண்ணை இணைத்து வருபவர் வேறொரு பெயரிலும் இருந்தாலும், பெயர்களில் குழப்பம் இருந்தாலும் இணைப்பு தோல்வியில் முடிந்துவிடுகிறது.
சரி, ஆதார் எண் இணைப்பு வெற்றிகரமாக நடந்துவிட்டதா, இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? திரும்பவும் ஒரு முறை முயற்சி செய்தால் தெரிந்துவிடும். ஆதார் எண் ஏற்கெனவே இணைக்கப்பட்டுவிட்டது என்று தகவல் வந்தால் நல்லது. இல்லையென்றால் திரும்பவும் முயற்சி செய்ய வேண்டும். தலைசுற்றுகிறதா? வேறு வழியே இல்லை!