ஏழுமலைகளைத் தாண்டி எம்பெருமான் வெங்கடாஜலபதி மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதுமிருந்தும், ஏன் வெளிநாடுகளிலிருந்தும் வரும் பக்தர்கள் காணக்கண் கோடி வேண்டும் என காத்திருந்து வணங்கிச் செல்கிறார்கள்.
செல்வ செழிப்புள்ள, வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு பல முறை தீவிரவாத வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருக்கின்றன. இது தொடர்பாக விசாரணை நடத்தி பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, சுமார் 90பேர் கொண்ட 'ஆக்டோபஸ்' எனும் படை, பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி எம்பெருமான் கோயில் மீது, ஒரு ஆளில்லா சிறிய ரக விமானம்(drone) பறந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ஆந்திராவைச் சேர்ந்த கிரண்(26) என்பவரை கைது செய்திருக்கின்றனர். அவர் யார்? எந்த இடத்தை சேர்ந்தவர் போன்ற எந்த விவரங்களையும் காவல் துறையினர் அளிக்க மறுத்து விட்டனர்.
அந்த நபர் எதற்காக திருப்பதி ஆலயம் மீது, ஆளில்லாத சிறிய ரக விமானத்தை, எந்த நோக்கத்திற்காகப் பறக்க விடப்பட்டது?, எவை எவையெல்லாம் படம் பிடிக்கப்பட்டது? அந்த ஒளிக்காட்சி யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டது? ஏதாவது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா? என்றெல்லாம், துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.