தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி அம்மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்த்திழுக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
இந்த அருவியில் , கடந்த மே 14 அன்று குடும்பத்துடன் குளிக்கச் சென்றார் நிக்சன் எனும் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர். அவரது குடும்பம் அருவியில் குளித்து விட்டு திரும்பி வருகையில் 70 அடி உயரத்திலிருந்து காய்ந்த மரக்கிளை ஒன்று நிக்சன் மகளான பெமினாவின் தலை மீது விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் அறிவிக்கவே நிக்சன் குடும்பம் அதிர்ச்சியடைந்தது.
10 ஆம் வகுப்பு மாணவியான பெமினா இந்த ஆண்டு தான் பொதுத்தேர்வு எழுதி இருக்கிறார். அடுத்தடுத்து உயர்கல்விக் கனவுகளுடன் இருந் சிறுமியான அவர் அருவியில் குளிக்கச் சென்றதொரு சந்தோசமான தருணத்தில் இப்படி துரதிருஷ்ட வசமாக உயிரிழந்த நிகழ்வு அந்தக் குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தி விட்டது.
இச்சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன்சுருளி அருவியில் குளிக்கச் சென்ற போது மரம் விழுந்து மாணவி உயிரிழந்த காரணத்தால் கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை அறிவித்து, அருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பகுதியில் உள்ள சாலைகளில் உள்ள மரங் காய்ந்த கிளைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது அந்தப் பணிகள் ஓரளவுக்கு முடிவடைந்த நிலையில் மே 18 வியாழக்கிழமையான இன்று முதல் மீண்டும் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுருளி அருவியில் குளிக்க அனுமதி அளித்தாலும் கூட சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கண்காணிப்பு இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்று தெரியவந்திருக்கிறது.