ஸ்ரீரங்கம் கோயிலில் கோபுர முகப்புப் பகுதியில் சுண்ணாம்பு காரை பெயர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கிழக்குவாசல் நுழைவுவாயில் கோபுரத்தின் முகப்பு பகுதியில் சுண்ணாம்பு காரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே, இந்த கோபுரத்தில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனை முழுமையாக சீரமைக்காமல் தற்காலிகமாக சவுக்குகளை கொண்டு முட்டு மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் கோபுரத்தில் முட்டுக் கொடுத்த பகுதியில் செங்கல் கலந்து கட்டப்பட்ட சுண்ணாம்பு காரை பெயர்ந்து விழுந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோயில் ஊழியர்கள் சிதறி கிடக்கும் காரையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், போர்க்கால அடிப்படையில் கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.