செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : சர்ச்சைக்குள்ளான ஆளுநரின் பேச்சு. கொந்தளிக்கும் தி.மு.க கூட்டணிக்கட்சிகள்.

ஜெ. ராம்கி

நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு தூத்துக்குடி போராட்டம் குறித்து ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் இந்திய குடிமையியல் பணி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களை ஊக்கப் படுத்தும் வகையில் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.

வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலமாக வருகிற நிதிகளை முறைப்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று  ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு ஆளுநர் அளித்த பதில்தான் சர்ச்சையாகியிருக்கிறது.

‘தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தை எடுத்துக் கொள்வோம். ஆலையை மூடுமாறு போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்துவதற்கான முழு நிதியுதவியும் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி போராட்டம், ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டம்தான். துரதிருஷ்டவசமாக வன்முறையில் முடிந்து, அதனால் அப்பாவிகள் உயிரிழந்தார்கள். அதுவொரு சோகமான சம்பவம்.

ஸ்டெர்லைட் நிறுவனம் எப்படியாவது மூடப்படவேண்டும் என்று சில வெளிநாட்டு சக்திகள் விரும்பினார்கள். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 40 சதவீதம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. எலெக்ட்ரானிக்ஸ் துறையில் காப்பர் எந்தளவுக்கு முக்கியம் என்பது உங்களுக் கெல்லாம் நன்றாகவே தெரியும்.

மனித உரிமை ஆர்வலர்கள், பசுமை பாதுகாப்பு இயக்கத்தவர்கள் என்கிற பெயரில் ஏராளமான அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். இவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி வருகிறது. கூடங்குளத்தில் உள்ள அணுக்கரு உலையில் கூட இதே பிரச்னைதான். அங்கே பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, மக்களின் பெயரால் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்கார்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைத்து வந்தது.

போராடுவது மக்களின் உரிமை. அதை அவர்கள் மேற்கொள்வதில்  எந்த தவறுமில்லை. ஆனால், தேசிய நலனுக்கு எதிராக ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பிற்கு வெளிநாடு களிலிருந்து நிதியுதவி கிடைத்து வருகிறது. இந்திய சகோதரத்துவ நிதி என்று அதற்கு பெயரிட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி அனுமதிப்பது? 

இந்தியாவுக்கு அனுப்பப்படும் நிதியிலிருந்து தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளுக்குத்தான் நிதி அனுப்பப்படுகிறது. இங்கிருந்து சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தொடர்பு நீளுகிறது.

வெளிநாட்டு நிதிகள் பலவும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க பயன்படுத்தப்படுகின்றன. நாடு வேகமாக வளர்ந்து வரும் நிலையில் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது

வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி அனுப்பப்பட்டு, நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வரும் நிதியை கட்டுப்படுத்துவதற்காகத்தான் மத்திய அரசு எப்.சி.ஐ நிதியை முறைப்படுத்தியிருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

தூத்துக்குடி போராட்டத்தை ஆளுநர் கொச்சைப் படுத்தியிருப்பதாக தி.மு.கவின் கூட்டணிக் கட்சியினர் கொந்தளித்திருக்கிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது ஒதுங்கியிருந்த வை.கோ, ஆளுநரை எதிர்த்து முதல் ஆளாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT