மார்க் ஜுகர்பெர்கின் Threads நிறுவனம் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளது. இது சார்ந்த நோட்டீஸ் மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜூகர்பெர்க்கு அனுப்பப்பட்டது.
ட்விட்டர் நிறுவனத்தின் சீக்ரெட் டேட்டாக்களை திரெட்ஸ் நிறுவனம் திருடியதாக, ட்விட்டர் புகார் அளித்துள்ளது. தங்களுடைய செயலியை காப்பி அடித்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழக்கறிஞர் "ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை எவ்வித அனுமதியுமின்றி, வேண்டுமென்றே Threads பயன்படுத்தி இருக்கிறது. பல முன்னாள் ட்விட்டர் ஊழியர்களை மெட்டாவில் பணியமரத்தி, எங்கள் செயலியை அப்படியே காப்பியடித்து விட்டீர்கள். அந்த ஊழியர்கள் ட்விட்டரின் பல ரகசியங்களை மெட்டா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்கள். சிலர் ட்விட்டரில் பணிபுரியும்போதே மெட்டா நிறுவனத்திற்கு ரகசிய தகவல்களை வழங்கியதன் மூலமே Threads செயலி உருவாக்கப்பட்டுள்ளது" என மார்க் ஜுகர்பெர்குக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதைப்பற்றி எலான் மஸ்க்கும் ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். "போட்டி இருப்பது சரியானதுதான். ஆனால், காப்பி அடிப்பது தவறு" என அதில் குறிப்பிட்டிருந்தார். நேற்று வெளியான இந்த த்ரெட் செயலி மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது. ட்விட்டரில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த புதிய செயலி, சிறிய பதிவுகளை அப்டேட் செய்யும் தளமாக இயங்க உள்ளது. ட்விட்டரில் தற்போதைய நிலவரப்படி 368 மில்லியன் பயனர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த திரட் செயலி தொடங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியன் யூசர்களைக் கடந்து, தற்போது 10 மில்லியன் பயனர்கள் இதில் இணைந்துள்ளனர்.
அதே சமயம் தற்போது இன்ஸ்டாகிராமில் 2.35 பில்லியன் பயனர்கள் இருக்கின்றனர். அந்த பயனர்கள் இன்ஸ்டாகிராமின் கிளை நிறுவனமான Threads-ல் இணைந்தால், ஒரே வாரத்தில் ட்விட்டரின் ஒட்டு மொத்த பயனர்களின் அளவை திரட்ஸ் முந்திவிட வாய்ப்புள்ளது. அதிகப்படியான பயனர்கள் இந்த செயலியில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். எனவே மக்கள் மத்தியில் இது அதிகம் கவனம் பெற்றுள்ளதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்நிலையில், திரெட்ஸ் நிறுவனம் மீதான ட்விட்டர் நிறுவனத்தின் புகார் நிரூபிக்கப்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை அது நிரூபிக்கப்பட்டால் த்ரெட் செயலி முழுமையாக நீக்கப்பட வாய்ப்புள்ளது.