சோசியல் மீடியாவில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் முக்கியமானது ட்விட்டர் நிறுவனம். சமீபத்தில் உலகில் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கியதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் இவரது கைக்குள் வந்தது.
இதையடுத்து, உடனடி முடிவாக ட்விட்டரின் சி.இ.ஓ. பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி, பொது ஆலோசகர் என பல முக்கிய அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும்விதமாக பல ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தார்.
அதோடு மட்டுமில்லாமல், ஆன்லைனில் பணிபுரியும் வசதியையும் முடக்கி, அனைவரும் அலுவலகம் வந்து வேலை செய்யும்படி பணித்திருக்கிறார்.
இவ்வளவும் கடந்து, ட்விட்டர் நிறுவனத்தின் பொருளாதார நிலையை உயர்த்தவேண்டும். அதற்காக ஊழியர்கள் கூடுதல் நேரம் கடுமையாக பணியாற்ற வேண்டும் என்று மெயிலும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விஷயங்கள் ஊழியர்களின் மனதில் சஞ்சலப்பை ஏற்படுத்தியதால், பலரும் தங்களது வேலையை ராஜினாமா செய்தார்கள்.
இந்நிலையில், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் அலுவலகம் நவம்பர் 21ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு, இதுகுறித்து பொதுஇடங்களில் விவாதிக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை உறுதிசெய்யும்விதமாக, நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கே, ட்விட்டரை மூடுவதாக சிம்பாலிக்காக ஒரு மீமை போட்டு அதை ட்விட்டரிலேயே ஷேர் செய்துள்ளார். உடனேயே இந்த போஸ்ட் வைரலாக, #RIPTwitter, #GoodByeTwitter போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.
இதைத் தொடர்ந்து, "நானும் எனது 3 பாலோவர்களும் Twitter-ஐ காப்பாற்ற முயற்சிக்கிறோம்", "Hoppin on twiiter rn" இதுபோன்றெல்லாம் நெட்டிசன்கள் ட்விட்டரிலேயே ட்வீட் போட்டும் வருகிறார்கள்.