பொதுவாக உலகிலேயே சிறிய நாடு எது? என்றுக் கேட்டால், அனைவரும் கூறும் பதில் வாட்டிக்கன். ஆனால் உண்மையிலேயே அதைவிட மிகச்சிறிய நாடு ஒன்று உள்ளது. அதுவும் நடுக்கடலில் உள்ளது. அங்கீகரிக்கப்படாத உலகிலேயே சிறிய நாடாக இருக்கும் இந்த நாட்டின் பெயர் சீலேண்ட்.
இங்கிலாந்து நாட்டின் சஃப்லோக் கடற்கரையிலிருந்து சுமார் 6.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நாடு ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ராணுவக் கடற்படைத் தளமாக இருந்தது. 1942ம் ஆண்டில் அதாவது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இங்கிலாந்து அரசு மற்ற நாடுகளின் விமானங்கள் இங்கிலாந்திற்குள் வரவிடாமல் தடுக்கவும், பிரிட்டிஷ் கப்பல் தடங்களில் ஜெர்மன் அரசு கடற்படைச் சுரங்கம் அமைப்பதைத் தடுக்கவும்தான் நடுக்கடலில் இந்தத் தளங்கள் கட்டப்பட்டன. ஆனால் அந்த போர் முடிவடைந்த உடனே இங்கிலாந்து அந்த தளங்களைக் கைவிட்டது.
அந்தவகையில் 1967ம் ஆண்டு ராய் பேட்ஸ் என்பவர் அந்தத் தளங்களில் ஒன்றைக் கைப்பற்றி அதனை சீலேண்ட் என்ற பெயரில் சொந்த நாடாக அறிவித்தார். பின் ராய் பேட்ஸ் குடும்பம் அங்கு அரச குடும்பமாக வாழ்ந்து வருகிறது. ஒரு சிறிய கட்டடம் அதன் மேல் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு போதுமானத் தளத்துடன் உள்ள இந்த சீலேண்டிற்கு தனி பாஸ்போர்ட், நாணயம், கொடிப் போன்றவை உள்ளன.
1978ம் ஆண்டு, டச்சு, சீலேண்டைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அதேபோல் 1990ம் ஆண்டு இங்கிலாந்து அரசு சீலேண்டை சோதனை செய்தது. அந்தச் சோதனைக்குப் பின் ராய் பேட்ஸின் மகன் இங்கிலாந்து அரசால் கைது செய்யப்பட்டார்.
27 பேர் கொண்ட மக்கள்தொகையை கொண்ட இந்த நாடு பலமுறைத் தங்கள் நாட்டிற்குத் தனி அந்தஸ்த்துக் கொடுக்க வேண்டும் என்று பலமுறைக் கேட்டும் அதைக் கொடுக்கவில்லை. இன்றும் சீலேண்ட் ஒரு தனி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.
இப்படிப் பலச் சிக்கல்களை சீலேண்ட் நாடு கொண்டிருந்தாலும்கூட தங்கள் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தை இன்று வரை செய்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் முதலில் இப்படி ஒரு அதிசய சிறிய நாடு உள்ளது என்று அறிந்த உலக மக்கள், தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வந்தனர். ஆனால் இப்போது பலர் கடல் மேல் இருக்கும் இந்த அதிசய நாட்டிற்கு பாஸ்போர்ட் எடுத்து சுற்றிப்பார்த்து வருகின்றனர். இது ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளதால், அதன் மூலம் தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
சீலேண்டின் மேல் இரண்டு குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து அரசு முன்வைக்கிறது. அதாவது இது நடுக்கடலில் இருப்பதால் கடற்கொள்ளையர்களுக்கும் இங்கிலாந்து அரசை வீழ்த்த நினைக்கும் ஹேக்கர்களுக்கு இடம் கொடுப்பதாக இங்கிலாந்து அரசு குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்தநிலையில் சீலேண்ட் நாடு எப்போது வேண்டுமென்றாலும் இடம் தெரியாமல் அழிக்கப்படலாம், அதேபோல் எப்போது வேண்டுமென்றாலும் அங்கீகரிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்படலாம் என்ற சிக்கலான நிலைமையில் தான் உள்ளது.