மண்டலம் மற்றும் மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நியமித்துள்ளார்.
2 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாறி இருக்கிறது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சியினுடைய தலைவர் தொல். திருமாவளவன் பேச்சு கருத்தியல் ரீதியாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சுகள் அரசியல் வட்டாரத்திலும், சமூக நிலையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியின் அமைப்பு விதிகளில் உள்ள மாவட்டங்களை மறுவரையறை செய்து, புதிய நிர்வாகிகளை மாற்றி உள்ளார் திருமாவளவன்.
இவ்வாறு விசிகவில் உள்ள 114 அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள் மற்றும் 21 மண்டலங்களுக்கு புதிய செயலாளர்களை ஜூலை 26 ஆம் தேதி நியமித்தார்.
இந்நிலையில் புதிய நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இதில் பேசிய தொல். திருமாவளவன் புதிய நிர்வாகிகள் கட்சியினுடைய வளர்ச்சிக்கு உதவ வேண்டும். உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். கூர்மையான அரசியல் தெளிவோடு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மக்களை அணுக வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்தி கட்சி வளர்க்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும். அதேசமயம் அடுத்த வருடம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை மிக கவனத்தோடு எதிர்கொள்ள வேண்டியது அவசியம். எந்தவித சூழ்ச்சிகளுக்குள்ளும் சிக்காமல் பயணிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.