செய்திகள்

சென்னைக்கு படையெடுக்கும் வாகனங்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்

கல்கி டெஸ்க்

பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்கள் பலரும் கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் சென்னையிலிருந்து தங்கள் ஊர்களுக்கு சென்றிருந்தார்கள். பண்டிகை முடிந்து அனைவரும் நேற்று முதல் பேருந்து மற்றும் ரயில் மூலம் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் பேருந்து மார்க்கமாக சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கசாவடியில் தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கடந்த 13ஆம் தேதி முதல் தென்மாவட்டத்திற்கு கடந்த 3 நாட்கள் தொடர்ந்து வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன.

இந்நிலையில் விடுமுறை முடிந்து அனைவரும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் அனைத்து வாகனங்களும்  இப்போது ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்புகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் வாகனங்கள் சென்னையை நோக்கி வந்த நிலையில் இருந்தன. மாலை 5 மணிக்குமேல் கூடுதலாக வாகனங்கள் வந்ததால் சுங்கசாவடி நிர்வாகம் கூடுதலாக கவுண்டர்களை திறந்து வாகனங்களை அனுமதித்தாலும் அதையும் மீறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் மதுராந்தகம் புறவழி சாலையில் திருச்சி- சென்னை மார்க்க சாலையில் மூன்று கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் விபத்தால் சுமார் 3 கிலோமீட்டார் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 

கோடைகாலத்தில் முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் வழிமுறைகள்!

விதியை நிர்ணயிப்பது நமது கடமையே!

முன்பின் தெரியாதவர் கொடுக்கும் உணவை ஏன் உண்ணக்கூடாது தெரியுமா?

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்… ஹீரோ யார்?

சிங்கத்தை ஏன் வேட்டையாடுகிறார்கள் தெரியுமா? 

SCROLL FOR NEXT