செய்திகள்

தண்ணீர்... தண்ணீர்… கோடை வந்துவிட்டால் கண்ணீர்!

திருமாளம் எஸ்.பழனிவேல்

கோடை வந்துவிட்டால் வழக்கம் போல குடிநீர் தட்டுப்பாடு  வந்துவிடும். காலி குடங்களை தூக்கிக்  கொண்டு மக்கள்  அலைவதும் போராட்டம் நடத்துவதும் வரும் காலங்களில்  தினசரி நிகழ்வாகிவிடும்.  ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது அதாவது 1970 -80 வரையில்  பாசனத்திற்கு மேட்டடூரை நம்பியே விவசாயம் நடந்து வந்தது. ஊருக்கு ஒன்று இரண்டு என்று பெரிய விவசாயிகளிடம்  மட்டுமே பம்ப்செட் இருந்தது.  அப்போதெல்லாம் 30 லிருந்து  40 அடிக்குள்ளே நிலத்தடி நீர் கிடைத்து வந்தது. பம்ப்செட்  மூலம் ஆரம்பகால பணிகளை முடித்து விடுவார்கள். நடவு  ஆரம்பிப்பதற்குள் மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர்  கடைமடை வரை வந்துவிடும். ஆறுகள் வாய்க்கால்களில்  முறையாக தூர் வாரப்பட்டு சேதமில்லாமல் காவிரி நீர்  பயன்பட்டு வந்தது.  

1990 க்கு பிறகு ஒரு ஊரில் ஒரு பம்ப்செட்டுக்கும்  இன்னொரு பம்ப்செட்டுக்கும் இடையே உள்ளே  இடைவெளி குறைய   ஆரம்பித்தது. நிலத்தடி நீர் பயன்பாடு அதிகமாகிக் கொண்டே போகிறது .  தற்போது 150 அடிக்கு மேல் துளையிட்டு  நிலத்தடி நீர்  எடுக்கப்பட்டு வருகிறது. ஜூன், ஜூலைக்குள் திறக்கப்படும் மேட்டூர் அணை  ஆகஸ்ட் என்று தள்ளிப்போனது.  சில சமயம்  ஆடிப்பெருக்கு கூட   கொண்டாட முடியாத   நிலைமை வந்தது. ஜெயலலிதா அவர்கள்  முதல்வராக  இருந்த போது மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயமாக  அமல்படுத்தினார். மழை நீர் சேமிப்பு மூலம் நிலத்தடி நீர்  பாதுகாக்கப்பட்டது.  மழை நீர் சேமிப்பின் அவசியம் பற்றி  இப்போது யாருமே பேசுவதில்லை. காவிரி பிரச்சனை வரும் போது மட்டும்  ஒரு சிலர் இதைப்பற்றி பேசுவார்கள்.  கோடையில்  ஆறுகள், ஏரிகள், குளங்கள் தூர் வாரினால் மழைநீர்  வீணாகமல் சேமிக்கலாம்.  

மழைக்காலங்களில் அனைத்து  ஆறுகளிலும் வெள்ளம் சாலைகளை தொட்டுக்கொண்டு சென்று  காரைக்கால் அருகே கடலில் கலந்து பயனற்று போய்விடுகிறது. அதனை முறைப்படுத்த எந்த ஒரு திட்டமும் இதுவரையில்  கொண்டு வரவில்லை.

மாநில நீர்வளதுறையின் கீழ் இயங்கும் 'மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம், நடத்திய ஆய்வில்  நிலத்தடி நீர் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.  அதை உயர்த்துவதற்கான முயற்சிகளை தமிழக அரசு உடனே  மேற்கொள்ள வேண்டும். 'வரப்புயர நீர் உயரும் நீர் உயர  நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல்  உயரும், கோல் உயர கோன் உயர்வான்'  - நமக்காகதான்  அவ்வையார்  பாடினார் என்பதை யாரும் மறக்கக்கூடாது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT