செய்திகள்

என்ன தைரியம் உனக்கு? வனராஜாவை விரட்டியடித்த நீர்யானை!

ஜெ.ராகவன்

விலங்குகளில் சிங்கம் தான் வனப்பகுதியில் ராஜா. தனது அதிகார தோரணையாலும், உடல் பலத்தாலும் காட்டுக்கு ராஜாவாக சிங்கம் அழைக்கப்படுகிறது. சிங்கம் உறுமினாலே மற்ற விலங்குகள் பயத்தில் ஓடிவிடும்.

எனினும் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான விடியோ சிங்கம் உண்மையிலேயே வனராஜாவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏரியில் தண்ணீர் குடிக்க வரும் சிங்கத்தை நீர்யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் விரட்டியடிக்கும் விடியோ வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கபாமா என்ற இடத்தில் எடுக்கப்பட்ட இந்த விடிவோவின் கீழ் “எங்கள் ஏரியில் தண்ணீர் குடிக்க என்ன தைரியம் உனக்கு?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விடியோவில் ஏரியின் கரையில் சிங்கம் தண்ணீர் குடிப்பதற்காக வாய் வைக்கிறது. ஏரியின் நடுவில் தண்ணீருக்குள் நின்று கொண்டிருக்கும் நீர்யானைக்கு இதை பார்த்தவுடன் கோபம் கொப்பளிக்கிறது. உடனே ஆக்ரோஷத்துடன் கரையை நோக்கி வேகமாக ஓடிவந்து சிங்கத்தை விரட்டியடிக்கிறது. தண்ணீர் குடிக்க வந்த சிங்கம், தனது பரிவாரங்களுடன் தப்பிச் செல்வதை விடியோவில் பார்க்க முடிகிறது. இந்த விடியோவை பார்த்த பலரும், அந்த நீர்யானை தனது குட்டிகளை காப்பாற்றவே இவ்வாறு ஆக்ரோஷமாக சிங்கத்தை விரட்டியடித்ததாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

விடியோவை 1.7 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 8,000 பேர் லைக்ஸ் போட்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலருக்கும் இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர், உண்மையான ராஜா யார் எனத் தெரிந்துவிட்டது. இப்படி பயந்து ஓடும் சிங்கம் எப்படி வனராஜாவாக இருக்க முடியும்? வெட்கம்… என்று பதிவிட்டுள்ளார். உண்மையான ராஜா யார் என்று காட்டிவிட்டது நீர்யானை என்று வேறு ஒருவர் கருத்து பதிவுசெய்துள்ளார்.

மூன்றாவது நபர், “சிங்கம் தான் வனராஜா. இதில் சந்தேகம் வேண்டாம். எதிரிக்கு போக்கு காட்டவே சிங்கம் பயந்து ஓடுவதுபோல் ஓடுகிறது. நீர்யானை தண்ணீரை விட்டு வெளியே வந்தால் சிங்கம் தனது பலத்தை காட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

நீர்யானைகள் தண்ணீருக்குள்ளேயே வாழ்பவை. சாதாரணமாக யாரையும் அது வலுவில் சென்று தாக்குவதில்லை. ஆனால், யாராவது வம்புக்கு வந்தால் அல்லது துன்புறுத்தினால் பதிலுக்கு மூர்க்கத்தனமாக தாக்கும் தன்மை கொண்டது. நீர்யானையின் பற்கள் மிக கூர்மையானவை. ஆப்பிரிக்காவில் நீர்யானை தாக்கி ஆண்டுக்கு 500 பேர் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் நாட்டுக்கதை - நெசவாளியின் மதிநுட்பம்!

எண்ணெய் தடவாமல் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

மகிழ்ச்சி என்பது தாற்காலிகமானதா நிரந்தரமானதா?

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

SCROLL FOR NEXT