உத்தவ் தாக்கரே  
செய்திகள்

இதுதான் ராம ராஜ்ஜியமா? பா.ஜ.க. அரசுகளுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி?

ஜெ.ராகவன்

முதலில் மணிப்பூர், இப்போது ஹரியாணா. இதுதான் ராம ராஜ்ஜியமா? என்று பா.ஜ.க. அரசுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சிவசேனை கட்சி உத்தவ் பிரிவின் தலைவர் உத்தவ் தாக்கரே.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. ஹரியானாவில் கடந்த திங்கள்கிழமை இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. அங்கிருக்கும் அரசுகள் என்ன செய்கின்றன என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிப்பூர் வன்முறை குறித்து நான் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளேன். அங்கு ஒரு பெண்தான் மாநில ஆளுநராக உள்ளார். அங்கு பழங்குடியின பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு ஆளும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. மத்தியிலும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிதான். மாநிலத்திலும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிதான். இரட்டை என்ஜின் ஆட்சி என்கிறார்கள். அது என்னவாயிற்று என்று கேட்டார் உத்தவ் தாக்கரே.

எதிர்க்கட்சிக் கூட்டணியான இந்தியா அணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் மும்பையில் நடைபெறும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிதிஷ் ரானே பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறியதை விமர்சித்த உத்தவ் தாக்கரே, பா.ஜ.க.வினரிடம் இதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். அவர்களால் பெண்களை பாதுகாக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

அவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? மணிப்பூரில் பெண்களின் நிலமை என்னவென்று அனைவருக்கும் தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாதவர்கள் ஹிந்துத்துவா பற்றி மட்டும் வாய்கிழிய பேசுகிறார்கள் என்றார் உத்தவ் தாக்கரே.

பாஜகவை குறைகூறி பேசிய அவர், ராமாயணம் சீதைக்காக தொடங்கியது. மகாபாரதம் திரெளபதிக்காக தொடங்கியது. ஆனால். இந்த அரசு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. இந்தியாவை இந்து தேசம் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது என்றார் உத்தவ் தாக்கரே.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை நீடிக்கிறது. அங்குள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள (53 சதவீதம்) மெய்டீஸ் வகுப்பினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரி பேரணி நடத்தியதை அடுத்து கடந்த மே 3 ஆம் தேதி வன்முறை வெடித்தது.

இதுவரை வன்முறைக்கு 160 பேர் பலியாகியுள்ளனர். 50,000-த்துக்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். (குக்கி இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் மலைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர்.)

இந்த நிலையில் கடந்த மே 4 ஆம் தேதி குக்கி இன பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாண கோலமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பான விடியோ சமீபத்தில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கையில் இது நாட்டுக்கே அவமானம் என்று தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட வேண்டும். விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் கோரி வருவதால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சரிவர நடைபெறாமல் முடங்கிப் போயுள்ளது.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை ஹரியாணா மாநிலம் குருகிராம் அருகில் நுஹ் என்னுமிடத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் யாத்திரை மேற்கொண்டபோது வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். வன்முறை தொடர்ந்ததில் மசூதி மீது குண்டு வீசப்பட்டது. இதில் இமாம் ஒருவர் உயிரிழந்தார். அங்கும் வன்முறை, பதற்றம் நீடிக்கிறது. இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

கதிரியக்க மாசுக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

SCROLL FOR NEXT