தெலங்கானாவில் சட்ட மன்றத் தேர்தல் பரபரப்பு நிலவும் சூழ்நிலையில், அதன் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஊழல் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்து, சிறையில் தள்ளி விட்டார் ஆந்திர முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி.
அப்பாவுக்கு ஜாமீன் வாங்க ஆந்திரா முதல் டெல்லி வரை கோர்ட் படி ஏறி, இறங்கிக்கொண்டிருக்கிறார் நாயுடுவின் மகன் நாரா லோகேஷ். உடல் நலம் முதல் சிறைக்குள்ளே பாதுகாப்பு வரை பல்வேறு விதமான காரணங்களைக் காட்டி ஜாமீன் கேட்டாலும், நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற சஸ்பென்ஸ் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இதற்கிடையில், டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து, அப்பாவின் மீது அரசியல் ரீதியாக பழி வாங்கும் நோக்கத்துடன் ஜகன் மோகன் ரெட்டி போடப்பட்டிருக்கும் கேஸ்தான் இது என்று சொல்லி, ஆதரவு தேட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நாயுடுவின் மகன்.
அரசியல் ரீதியாக, நாயுடு, பவன் கல்யாண் இருவரையும் பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற எண்ண ஓட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், நாயுடு விஷயத்தில் முடிவெடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறது பா.ஜ.க.
காரணம், தெலங்கானாவில் சட்ட சபைத் தேர்தல் நடைபெறும் சமயத்தில், மீண்டும் நாயுடுவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என பா.ஜ.க. நினைக்கிறது. காரணம், தெலங்கானா மாநிலத்தை ஆந்திராவில் இருந்து பிரிக்கக் கூடாது என்று சொன்னவர் நாயுடு. அவரை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு, தேர்தலை சந்தித்தால், தெலங்கானாவில் அது பா.ஜ.க.வுக்கு பின்னடைவினை ஏற்படுத்திவிடும் என நினைக்கிறது பா.ஜ.க.
இன்னொரு பக்கம், ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி, லோக்கலாக நாயுடுவை எதிர்த்து அரசியல் நடத்திக் கொண்டிருந்தாலும், மம்தா, ஸ்டாலின் போல மத்திய அரசுடன் கடுமையான மோதல் போக்கினை அவர் கடைபிடிக்கவில்லை; சொல்லப் போனால், மிக முக்கியமான தருணங்களில், மத்திய அரசுக்கு ஆதரவாகவே அவர் நின்றிருக்கிறார்.
எனவே, இத்தகைய சூழ்நிலையில் ஜகன் மோகன் ரெட்டிக்கு எதிரான ஓர் அரசியல் நிலைப்பாட்டினை எடுக்க வேண்டாம் என்ற எண்ணமும் பா.ஜ.கவுக்கு உள்ளது.ஆகவேதான், எபப்டியாவது பா.ஜ.கவின் ஆதரவைப் பெற்றுவிடவேண்டும் என துடியாய்த் துடிக்கிறார் சந்திர பாபு நாயுடு. பா.ஜ.க. வோ அதற்குப் பச்சைக் கொடி காட்டாமல் காத்திருப்பில் வைத்துள்ளது.