செய்திகள்

ம.பி. தேர்தலில் கைகொடுக்குமா குஜராத் உத்தி?

ஜெ.ராகவன்

2023 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் குஜராத் பாணியை பின்பற்ற பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

எதிர்ப்பு அலைகளை சமாளிப்பது, கட்சித் தலைவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்குவது, பொதுமக்களிடம் கட்சிமீதான நன்மதிப்பை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்வது என பல்வேறு உத்திகளை பா.ஜ.க. தயாரித்து வருகிறது.

குஜராத்தை போலவே ம.பி. மாநிலத் தலைமையையும் மாற்றியமைக்க பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டுள்ளது. இப்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களில் 50 சதவீதம் பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராமல் புதிய முகங்களை தேர்தல் களத்தில் இறக்கவும் திட்டமிடுகிறது. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, தடைகளை களைந்து தேர்தல் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாகத் தெரிகிறது.

மத்தியப் பிரதேசத்தில் 2003 முதல் 2018 வரை பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. 2018 தேர்தலில் மொத்தம் உள்ள இடங்களில் 230 இடங்களில் பா.ஜ.க. 109 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் 114 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், 2020 மார்ச் மாதம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்ததை அடுத்து மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது.

நீண்டகாலம் ஆட்சியில் இருப்பதால் சவால்களையும், ஆபத்துகளையும் நாங்கள் அறிவோம். மக்களிடம் குறிப்பாக இளைஞர்கள் பா.ஜ.க. ஆட்சி சலித்துப்போய்விட்டதாக உணரலாம். எனவே மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்சி நிர்வாகத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு, புதிய உத்திகளுடன்  தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறோம் என்கிறார் கட்சியின் மாநிலத் தலைவர் வி.டி.சர்மா.

முதல் கட்டமாக 64,000 ‘பூத்’களும் டிஜிட்டல் மயமாக்கப்படும். மாவட்ட மற்றும் மண்டல அளவில் இளைஞர்களை கட்சித் தலைவர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இப்படிச் செய்யும்போது மூத்த தலைவர்களுக்கும் இளைய தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவாகும். எனினும் இவற்றை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இமாச்சல் தேர்தலில் உட்கட்சி பூசலால், தேர்தலில் டிக்கெட் கிடைக்காதவர்கள் அதிருப்தி வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். கட்சியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். இந்த பிரச்னையும் தீர்க்கப்படும்.

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் உரியவர்களைச் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்யுமாறு கட்சியினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரின் வாக்குகளை வெல்லமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

வரும் தேர்தலில் 1.7 மில்லியன் பேர் முதன்முறையாக தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களின் வாக்குகளைப் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வின் குஜராத் உத்தி மத்தியப் பிரதேசத்தில் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் நீங்க இயற்கை வழிமுறை!

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

SCROLL FOR NEXT