செய்திகள்

சாராயம் கடத்திய பெண் காவலர் கைது - நாகை போலீஸார் அதிரடி

கல்கி டெஸ்க்

பெண் காவலர் மற்றும் அவரது கணவர் காரைக்காலிலிருந்து நாகைக்கு காரில் சாராயம் கடத்தி வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பெண் போலீஸ் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பெண் காவலர் போலீஸ் சீருடையில் கடத்தலில் ஈடுபட்ட இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்திலும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்துவருவதாக புகார்கள் வந்துக்கொண்டே இருந்தன. அதுவும் உள் கிராம பகுதிகளில் சாராய விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், இதனால் பல சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதாகவும், பொது மக்கள் நடமாடவே அச்சமாக உள்ளது என்றும் புகார் வந்தது. இந்த சாராய கடத்தலை தடுக்க தீவிரம் காட்டிய போலிஸார் நாகை மாவட்டம் முழுதும் 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வந்தனர்.

தொடர் புகார்களைத் அடுத்து, சாராயக் கடத்தல், சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணித்து, தடுக்க மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாகச் சோதனை செய்துவருகின்றனர்.

அதன்படி, சோதனையில் மதுக்கடத்தலில் ஈடுபட்ட பலரைக் போலிசார் கைதுசெய்துவருகின்றனர். இந்த நிலையில், காரைக்காலிலிருந்து காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாகத் தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன்பேரில், தனிப்படை போலீஸார் நாகை நகர்ப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக அக்கரைப்பேட்டை சுனாமி நினைவிடம் அருகே கார் ஒன்று நிற்பதைப் பார்த்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸார் சோதனை செய்தனர்.

அந்தக் காரில் பெண் போலீஸ் உட்பட மூன்று பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினர். இதில் சந்தேகமடைந்த போலீஸார், அந்த காரில் சோதனை செய்தபோது, புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பெட்டிப் பெட்டியாக இருந்தது தெரியவந்தது. 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீஸார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது, நாகூர் அருகே கீழவாஞ்சூரைச் சேர்ந்த பெண் போலீஸ் ரூபிணி (32) என்பதும், அவர் திருவாரூர் மாவட்டம் வைப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், டிரைவர் பெண் காவலரின் கணவர் ஜெகதீஷ் (34) என்பதும், மற்றொருவர் நாகையைச் சேர்ந்த கோபிநாத் (38) என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள், 110 லிட்டர் சாராயத்தை காரில் கடத்திவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

 இதையடுத்து பெண் போலீஸ் ரூபிணி, ஜெகதீஷ், கோபிநாத் ஆகிய மூன்று பேரையும் கையும், களவுமாகப் பிடித்த தனிப்படை போலீஸார், மேலும் மதுபானம், சாராயத்தை வாங்க வந்தாக தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்த ராஜசேகர் (24), மகாலிங்கம் (44), மகேஸ்வரி (34) ஆகியோர் என மொத்தம் ஆறு பேரைக் கைதுசெய்தனர்.

சாராயம், மது பாட்டில்கள் கடத்தப் பயன்படுத்திய கார், பைக்குகளைப் பறிமுதல்செய்து நாகை டவுன் காவல் நிலைய போலீஸாரிடம், தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவுசெய்து, நாகை கோர்ட்டில் அனைவரையும் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நாகையில் பெண் போலீஸ் ஒருவர் சீருடையுடன் மதுக்கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொப்பையை வெகு வேகமாகக் குறைக்கும் பிளாங்க் உடற்பயிற்சியின் நன்மைகள்!

கோடைக்கு இதமான Strawberry Lemonade வீட்டிலேயே செய்யலாமே!

எத்தனை பிரதோஷ வழிபாட்டை பார்த்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

செம டேஸ்டான 'தேங்காய் போளியும் வெண்டைக்காய் பகோடாவும்' செய்யலாம் வாங்க!

போலி நண்பனின் 6 அறிகுறிகள்… அவர்களைக் கண்டறிந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

SCROLL FOR NEXT