தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத்தொகை திட்டம் வழங்கப்படுவதாக அறிவித்தது. தமிழ்நாட்டில் இன்னும் திட்டம் அமலுக்கு வரவிட்டாலும், தி.மு.க அரசை முந்திக்கொண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமலுக்கு கொண்டு வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் தி,மு.க பெற்ற வெற்றிக்கும் கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கும் மகளிர் உரிமைத்தொகையே காரணம் என்று இந்தியா கூட்டணிக்கட்சிகள் நினைக்க ஆரம்பித்துள்ளன. கர்நாடகாவை தொடர்ந்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அமலுக்கு கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தெலுங்கானாவிலும் மகளிர் உரிமைதொகையை அமலுக்கு கொண்டு வர சந்திரசேகர ராவ் அரசு முயற்சியெடுத்து வருகிறது. சமீபத்தில் சிறுபான்மையினருக்கு ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை தரும் திட்டத்தை தொடங்கி வைத்த தெலுங்கானா அரசு, மகளிர் உரிமைத்தொகையை கொண்டு வரும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மகளிர் உரிமைத்தொகை முக்கியமான வாக்குறுதியாக இருக்கும் என்று தெரிகிறது. 23 முதல் 60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 வழங்குவதற்கான திட்டத்தை மாநில பா.ஜ.க அரசு தொடங்கியிருக்கிறது. இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி, பெண்களுக்கு ரூ.1,500 மாத ஊதியம், சிலிண்டருக்கு ரூ.500 மானியம், இலவச 100 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதே 5 ஸ்டார் வாக்குறுதிகளை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அமல்படுத்துவதற்கு தயாராகிவருகிறது. ராஜஸ்தானில் புதிய வேலை வாய்ப்புத்திட்டமும், மத்தியப் பிரதேசத்தில் மகளிர் உரிமைத்தொகையும் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான வாக்குறுதியாக இருக்கும் என்கிறார்கள்.
இப்படியே போனால், மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் அமலுக்கு வருவதற்கு முன்னர் சில மாநிலங்களில் அமலுக்கு வந்துவிடுமென்று தெரிகிறது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.