ஒருவரின் கையெழுத்தில் இருக்கும் ஒழுங்கும் நேர்த்தியும் வைத்து அவரின் குணநலனை சொல்லிவிடலாம் என்பார்கள். இந்நிலையில் நேபாளம் நாட்டைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி உலகிலேயே அழகான கையெழுத்துக்கு சொந்தகாரர் மாறியுள்ளார்.
நேபாளத்தை சேர்ந்தவர் பிரகிருதி மல்லா எனும் பதினாறு வயது மாணவி . தொடர் பயிற்சிகளினால் தன்கையெழுத்தை அழகாக மேம்படுத்தியவர். இவர் எட்டாம் வகுப்பு படித்த போது எழுதிய கடிதத்தில் இருந்த அழகிய கையெழுத்தைப் பார்த்தவர்கள் அப்போதே வியந்து பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த மாணவி ஐக்கிய அரபு எமிரேட்சின் 51 வது ஆண்டு ஒற்றுமை தினத்தை முன்னிட்டு (( UAE 51 Spirit of the Union )வாழ்த்துக்கடிதம் ஒன்றை எழுதி அதை தனிப்பட்ட முறையில் அந்நாட்டு தூதரகத்திற்கு வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அரபு எமிரேட்சின் தூதரகம் அந்தக் கடிதத்தை டிவிட்டரில் வெளியிட அந்தக் கடிதம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது .
மேலும் அதில் உலகிலேயே இது மிகவும் அழகான கடிதம் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அவருக்கு இதற்காக விருதினையும் வழங்கி கவுரவித்துள்ளனர். உலகின் அழகான கையெழுத்து இந்த மாணவியின் தலைஎழுத்தை மாற்றிக் காட்டி அவரை உலக பிரபலம் ஆக்கியுள்ளது .