தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் யூபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் வசதி மிக விரைவில் ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோயில்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தோர் வசதிக்காக கோயில்களில் ஸ்வைப்பிங் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், 550 கோயில்களுக்கு 1,500 கையடக்க கருவிகளை கோயில் இணை ஆணையர்களிடம் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
அதன் பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக கோயில்களில் பக்தர்களுக்கு சேவை முன்பதிவு வசதியை எளிமைப்படுத்தும் வகையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி, வடபழனி ஆண்டவர் உள்ளிட்ட கோயில்களுக்கு 1,500 ஸ்வைப்பிங் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பக்தர்கள் கோயில் கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
- இவ்வாறு அவர் தெரிவித்தார்.