Uncategorized

வரலாற்று ஆர்வத்தைத் தூண்டிய நாவல்!

கே.பாரதி

– பேராசிரியை கே.பாரதி

பொன்னியின் செல்வன் புதினம் எனது இளம் வயது வாசிப்பு அனுபவத்தில் ஒரு மைல் கல். அந்தக் காலத்தில் வானொலியில் சினிமாப் பாட்டு கேட்பது கூட தவறு என்று கருதிய ஒரு சமூக மற்றும் குடும்ப சூழல் இருந்தது. எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது.

நாங்கள் வசித்த தெருவில் ஒரு நூலகம் இருந்தது. சுமார் இருநூறு புத்தகங்கள் இருந்ததாக நினைவு. அங்கே நிறைய நாவல்களை வாசித்திருக்கிறேன். ஆனால் பொன்னியின் செல்வனை நான் வாசித்தது அந்த நூலகத்தில் அல்ல. விடுமுறைக்கு என் பாட்டி வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அங்கே எங்களுக்கு ஒரு புத்தகப் புதையலே காத்திருக்கும். பைண்டு செய்து வைக்கப்பட்ட தொடர்கதைகள் நிறைய இருக்கும். ஊஞ்சலில் உட்கார்ந்து மெல்ல அசைந்தவாறு அவற்றை வாசித்த அனுபவம் அலாதியானது.

பொன்னியின் செல்வன் ஐந்து தொகுதிகள் என்பதால் வாசிக்க சற்று மலைப்பாக இருந்தது. அதை நிலுவையில் வைத்துவிட்டு மற்றவற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கல்கி வார இதழில் பொன்னியின் செல்வன் தொடர் மீண்டும் பிரசுரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

என் அம்மாவும், பக்கத்து வீட்டு பரமேசுவரி மாமியும் காய்கறி வாங்க சின்ன காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டுக்குப் போவார்கள். மொத்த வியாபாரத்தில் கிடைக்கும் சில்லறை சலுகைகளை பெரிய சேமிப்பாக நினைப்பார்கள். இரண்டு கைகளிலும் தூக்க முடியாத அளவுக்கு பை நிறைய காய்களை சுமந்து கொண்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்தே வீட்டுக்கு வரும் அவர்களைப் பார்க்கும்போது மனசு கனக்கும். வழியில் ஒரு இளநீர் வாங்கிக் குடிக்கக்கூட அவர்களின் பட்ஜெட்டில் இடம் இருக்காது. இப்படி சிக்கனம் பிடித்து அவர்கள் தங்களுக்கென்று செலவழித்து வாங்குவது எதைத் தெரியுமா? கல்கி பத்திரிகையை!

வினுவின் சித்திரங்களுடன் வெளிவந்த தொடரை வாசித்துவிட்டு இருவருமாக பொதுக் குழாயடியில் துணி துவைத்துக் கொண்டே விவாதிப்பார்கள். பழுவேட்டரையர், நந்தினி போன்ற பாத்திரங்கள் செவிவழியாக அவர்கள் மூலமாகத்தான் பரிச்சயமாயிற்று.

அவர்களின் பேச்சில் தொனித்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது. நானும் அப்போதுதான் அந்தத் தொடரை வாசிக்க ஆரம்பித்தேன். விட்டு விட்டு வாசித்த அந்தத் தொடரை பின்னாளில் தொகுப்பாக வாங்கி மறுவாசிப்பும் செய்திருக்கிறேன்.

ந்த சரித்திர நாவல் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு ஒன்றல்ல, மூன்று. வரலாற்றின் மீது எனது ஆர்வம் தூண்டப்பட்டது. பின்னாளில் வரலாறு பாடம்தான் படிப்பேன் என்று பிடிவாதமாக நின்று சாதித்தேன். வரலாற்றை கற்பிக்கும் ஆர்வமும் கிளை விரித்தது.

கல்கியின் பெண் கதாபாத்திரங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். பொன்னியின் செல்வனில் அலைகடலில் படகோட்டிக் கொண்டிருக்கும் பூங்குழலியின் பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. பின்னாளில் இலக்கியத்திலும், சினிமாவிலும் பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு குறித்து என் ஆர்வம் தூண்டப்பட்டதற்கு ஆரம்பப்புள்ளி பூங்குழலிதான்.

சித்திரம் வரைவதில் எனக்குள் இருந்த ஆர்வத்தை எனக்கே புரியவைத்ததும் பொன்னியின் செல்வன்தான். நந்தினியின் வட்ட முகத்தை அப்படியே காப்பியடித்து வரைந்து பார்ப்பேன். அந்தப் பெரிய கண்களைத் தீட்டும் முயற்சியில் என் சுற்றுச்சூழல்கூட மறந்துபோகும். ஓவியம் கற்கும் ஆர்வம் பின்னாளில் என்னை கொண்டுபோய் நிறுத்திய இடம் பாரம்பரிய பாணி ஓவியரான எஸ்.ராஜத்தின் இல்லம்.

இளவயது பதிவுகள் என்பது எவ்வளவு வலிமையானது என்பதை இப்படித்தான் நான் உணர்ந்து கொண்டேன்.

அந்த வயதில் நாம் பார்க்கின்ற, கேட்கின்ற, படிக்கின்ற விஷயங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இப்படி எதெல்லாம் நல்ல தாக்கத்தை உண்டுபண்ணுமோ, அதையெல்லாம் நமது முன்னோர்கள் ஏதோ ஒரு விதத்தில் அடுத்த தலைமுறைக்குக் கடத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷமான அனுபவங்களை அடுத்தத் தலைமுறைக்கு கடத்துவதற்கு எங்கள் தலைமுறைதான் தவறிவிட்டதோ என்ற குற்ற உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது.

நாம் என்ன செய்ய முடியும்? கால மாற்றத்திற்கு வேறு எத்தனையோ காரணங்கள் என்று சிலர் சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். அதுவும் ஓரளவு உண்மைதான். நமது புறச்சூழ்நிலை ஐம்பது வருடங்களில் வேகமாக மாறிவிட்டது ஒரு முக்கியக் காரணம். தொழில்நுட்பம் புதிய மீடியாவை வளர்த்தெடுத்தது. தொலைக்காட்சியில் தொடங்கி, இன்று கைபேசி வரை புதிய தொழில்நுட்பம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது. ஆனாலும்கூட, நாம் செய்த மிகப்பெரிய தவறு ஒன்று உண்டு.
என் வயது நண்பர்கள் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

"எங்கள் சின்ன வயதில் நாங்கள் வாசித்த பத்திரிகைகள்தான் எங்களை செதுக்கியது" என்று சிலாகிப்பார்கள். ''இன்று அதெல்லாம் ஏனோ மறைந்துவிட்டது" என்று புலம்புவார்கள்.

இதற்கெல்லாம் யார் காரணம்?

என் தலைமுறையிலும், என் அடுத்த தலைமுறையிலும் நிறைய பேர் பத்திரிகைகளை காசு கொடுத்து வாங்கவேயில்லை. லெண்டிங் லைப்ரரியிலும், சர்குலேஷன் லைப்ரரியிலும் வாங்கி வாசிப்பதை பெருமையாக சொல்லிக் கொண்டார்கள்.

சினிமாவுக்கும், ஹோட்டலுக்கும் செலவழிக்கத் தயங்காத அவர்கள் ஏனோ பத்திரிகை வாங்குவதை அனாவசிய செலவினமாகக் கருதிவிட்டார்கள். அது செலவு அல்ல, முதலீடு என்பதை உணரத் தவறியது ஒரு மாபெரும் தவறுதானே!

இன்று பத்திரிகைகளின் தரம் குறைந்துவிட்டது என்றும், சில பத்திரிகைகள் வெளிவராமல் நின்றுவிட்டன என்றும் புலம்புவதில் நமக்கும் பங்கிருக்கிறது என்பதை இவர்கள் உணரவில்லை.

என் அம்மாவும், பரமேசுவரி மாமியும் அவர்களுக்குத் தெரிந்த வகையில் சிக்கனம் பிடித்து செய்துவைத்த முதலீட்டின் மகிமைக்குத் தலைவணங்கத் தோன்றுகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT