ithara pirivu

பாம்பின் தோலைப் போல புடவை!

உலக புடவைகள் தினம் டிசம்பர் – 21

பொ.ஜெயச்சந்திரன்

சேலை என்றவுடன் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவிழாக்கள், சுபகாரியங்கள், பாரம்பரிய நிகழ்வுகள் போன்றவைதான் எனலாம்.
சங்கக் காலத்தில் பெண்கள் பல விதமான ஆடைகளை அணிந்திருந்தனர். அவ்வகையில் உயர்நிலையில் இருந்த அரசியர்களின் ஆடைகளாக பூந்துகில், கலிங்கம், கோடி நுண்துகில் போன்ற ஆடைகள் குறிப்பிடப்படுகின்றன. ஆடைகளை நிலம் தோயும் அளவுக்கு உடுத்தியிருந்தனர். கச்சும் மேலாடையும் அணிந்திருந்தனர் என்பதை “கோடி நுண்டுகிலை கொய்மு கொண்டீஇயதாகப்”  என்று குறிப்பிடும் பெருங்கதை மூலம் அறியலாம். 

மேலும், பெண்கள் தைக்காத துணியினை உடலில் போர்த்தி வந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. சங்கத் தமிழ்ப் பெண்கள் கீழாடையும், மேலாடையும் அணிந்திருந்தனர் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவர்கள் அணியும் நீச்சல் உடுப்புக்கு ஈரணி என்ற பெயர் வைத்திருக்கின்றனர். ஈரணி என்பது இரண்டு அணி அதாவது இரண்டு உடுப்பு என்ற பொருள் தரும்.

பண்டைக் காலத்தில் துணிகள் மிக மிக நுண்ணிய நூல்களினால் நெய்யப்பட்டன. அவற்றுள் தனித்தனி இழைகள் கண்ணுக்குப் புலப்படா புகையைப் போலவும், பாலாவியைப் போலவும், பாம்பின் தோலைப் போலவும், மூங்கிலின் உரியைப் போலவும் துணிகள் நெய்யப்பட்டன. ஆடைகளுக்குப் பூவேலைகள் செய்வதுண்டு. பட்டுப் புடவைகளின் முந்தானைகளில் குஞ்சம் கட்டப்பட்டது. பூந்துகில் வகைகள் மிகவும் வழுவழுப்பாக இருந்த காரணத்தால் வழுக்கி, வழுக்கி சரியுமாம். துணிகளுக்கு நறுமணம் ஊட்டுவதும் உண்டு. உலகின் மிகப் பழைமையான ஆடை வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது சேலை. வடமேற்கு இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் முதன் முதலில் சேலை பயன்படுத்தினார்கள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

ஒவ்வொரு நாடுகளிலும் ஒரு விதமான ஆடைப்பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இந்தியா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ஆண்களின் வேட்டியும், பெண்களின் சேலைகளும்தான். ஒவ்வொரு மாநிலமும் பாரம்பரியமும். கலாசாரமும், ரசனை மற்றும் கலை நயத்தில் மாறுபட்டிருக்கிறது. பார்போற்றும் பட்டு துணிகள் அதை அணிபவர்களுக்கு தெய்வீக அழகை தரும் என்று புகழ்வார்கள்; பட்டுச் சேலைக்கு தோஷமில்லை என்பது ஐதீகம். தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, திருப்புவனம் மற்றும் ஆந்திர மாநிலம் தர்மாவரம் ஆகிய பட்டுகள் உலக பிரசித்திப் பெற்றவை. இதில் காஞ்சிபுரம் பட்டுதான் அதிகமாக பெண்களால் விரும்பி வாங்கப்படுகிறது.  

கேரளாவின் கசவு செட்டு என்றழைக்கப்படும் புடவையை வெறும் துண்டு, முண்டு மற்றும் கச்சையாகவே அப்பெண்கள் உடுத்தி வந்தனர். இன்று அது புடவை வடிவில் கிடைக்கிறது. ஒடிசாவின் பொம்காய், சம்பல்புரி, சோன்புரி சில்க், பொம்காய் என்றழைக்கப்படும் இப்புடவை எம்ப்ராய்டரி மற்றும் நுணுக்கமான நூல் வேலைப்பாட்டுடன் பொதுவாக ஒன்பது கஜம் புடவையாக நெய்யப்படுகிறது. 

ஹாராஷ்டிரா மணப்பெண்களின் பாரம்பரிய புடவை என்று நவாரி புடவையைக் கூறலாம். ஒவ்வொரு மராட்டிய பெண்களும், விழாக்காலங்களில் இதை தவறாமல் அணிந்துகொள்கின்றனர். அதிலும் மராட்டிய புதுவருட பிறப்பு, விநாயகர் சதுர்த்தி திருவழா நாட்களில் நவாரியை அணிந்துகொண்டு தங்க நகைகளால் மேலும் அழகுப் படுத்தி நடனம் ஆடுவதைப் பல இடங்களிலும் பார்க்கலாம். அசாமில் நெய்யப்படும் முகா பட்டுப் புடவைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த பட்டுநூலை உண்டாக்கும் பட்டுப்பூச்சிகள் இரண்டு வகை இலைகளை மட்டும் உண்ணும். இதனால் இந்தப் பட்டு தனித்துவமான தரத்துடன் இருக்கும். இதுபோல உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட வகையான சேலையை உடுத்துகின்றனர். அண்மைக் காலங்களாக சேலைகளின் வரலாற்றை அறிந்துகொள்ளவும். அவற்றின் பெருமைகளைப் பேசவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21-ஆம் நாளன்று உலக சேலைகள் தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. 

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT