இன்றைய காலத்தில் ஹேக்கர்களிடமிருந்து தப்பிப்பதே பெரும் பாடாக உள்ளது. அவர்கள் என்னென்ன புதிய யுத்திகளில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே ஒரு சிலர் ஏமாற்றப்பட்ட பிறகுதான் தெரிய வருகிறது. இத்தகைய ஹேக்கர்களிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக சைபர் கிரைம் பிரிவினர் விழிப்புடன் செயல்பட்டாலும், குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது.
இப்படித்தான் மும்பை சைபர் கிரைம் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பணத்தை அனுப்பும் பேமெண்ட் கேட்வே கணக்கையே ஹேக் செய்து சுமார் ரூ.16,180 கோடி பணத்தை ஒரு கும்பல் திருடி உள்ளது. இதுதான் இதுவரை நடந்த மிக மோசமான சைபர் தாக்குதலாகும். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கொள்ளையர்கள் பேமென்ட் கேட்வே நிறுவனத்தின் கணக்கை மொத்தமாக ஹேக் செய்து, பல்வேறு வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தனை கோடி பணத்தை அவர்கள் பல நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக திருடியது யாருக்கும் தெரியவில்லை. முதல்முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் விசாரித்த போதுதான், நீண்ட காலமாக நடந்து வரும் இந்த மோசடி குறித்த உண்மை தெரியவந்துள்ளது. இதை போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது ரூபாய் பதினாறாயிரம் கோடிக்கும் அதிகமான பணம் ஹேக்கர்களால் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வளவு பெரிய ஊழல் சம்பந்தமான வழக்கு பதிவு செய்யப்பட்டும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் வங்கிகளில் பல ஆண்டுகள் மேலாளராக பணிபுரிந்துள்ளார். நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த மோசடியில் பல பெரிய புள்ளிகளின் தலையீடு இருக்கலாம் என காவல்துறையினர் யூகிக்கின்றனர். இதுபோல பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.