VPN 
அறிவியல் / தொழில்நுட்பம்

தனிப் பாதையை உண்டாக்கும் VPN சேவை - இது மிக அவசியம்!

என். சொக்கன்

ஒரு திரையரங்கத்துக்குச் செல்கிறீர்கள். அங்கு இலவச இணையம் கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். சும்மா உட்கார்ந்திருக்கிற நேரத்தில் ஏதாவது படிக்கலாம் என்று உங்களுடைய மொபைல் தொலைபேசியைப் பயன்படுத்தி அவர்களுடைய இலவச இணையத்தில் இணைகிறீர்கள்.

அப்போது, உங்கள் மேலாளர் உங்களை அழைக்கிறார், 'எனக்கு அவசரமா ஒரு தகவல் தேவைப்படுது. உடனடியா மின்னஞ்சலைப் பாரு' என்கிறார்.

'சரி, உடனடியாப் பார்த்துப் பதில் அனுப்பறேன்' என்கிறீர்கள் நீங்கள், சட்டென்று உங்களுடைய தொலைபேசியில் இருக்கும் மின்னஞ்சல் சேவையைத் திறக்க முற்படுகிறீர்கள்.

கொஞ்சம் பொறுங்கள். இப்போது உங்கள் தொலைபேசி பொது இணையத்தில் இணைந்துள்ளது. அங்கிருந்தபடி நீங்கள் உங்களுடைய அலுவலக மின்னஞ்சலைப் படித்தாலோ பதில் அனுப்பினாலோ அதை வேறு சிலர் திருட்டுத்தனமாக நோட்டம் பார்க்கக்கூடும். அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி உங்களுக்கோ உங்களுடைய நிறுவனத்துக்கோ சிக்கலைக் கொண்டுவரக்கூடும்.

அது எப்படி? என்னுடைய தொலைபேசி நேரடியாக என்னுடைய நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையகத்துடன்தானே தொடர்புகொள்கிறது? அதை எப்படிப் பிறர் பார்க்கமுடியும்?

எல்லாராலும் பார்க்கமுடியாது. ஆனால், இதுபோல் பொது இணையங்களில் தகவல் பரிமாற்றங்கள் எப்படி நடக்கின்றன என்பதை அறிந்த சிலரால் உங்களை எளிதில் நோட்டம் பார்க்கமுடியும். சொல்லப்போனால், இதற்காகவே பொது இணையங்களில் இணைந்துகொண்டு ஆவலுடன் காத்திருக்கிற திருடர்களெல்லாம் உண்டு.

இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரே வழி, அந்தப் பொது இணையத்துக்குள் உங்களுக்கென்று ஒரு தனி இணையத்தை உருவாக்கிக்கொள்வதுதான். அதன்பிறகு, இந்தத் தனிப்பாதையின் வழியாகப் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை யாராலும் பார்க்கமுடியாது, திருடமுடியாது. இதைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் தான் மெய்நிகர் தனி வலைப்பின்னல் (Virtual Private Network, சுருக்கமாக, VPN.)

நம்முடைய மடிக்கணினி அல்லது தொலைபேசியில் இந்த VPN மென்பொருளை நிறுவிக்கொண்டுவிட்டால், அது நம்முடைய கருவிக்கும் இணையத்தில் இருக்கும் தன்னுடைய சேவையகத்துக்கும் (VPN Server) ஒரு ரகசியத் தனிப்பாதையை உண்டாக்கிவிடும். அதன்பிறகு, நாம் அனுப்பும் தகவல்கள் இந்தத் தனிப்பாதையின் வழியாகத்தான் அனுப்பப்படும். VPN சேவையகம் அவற்றைப் பெற்று வேண்டிய இடத்துக்கு அனுப்பும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்களுடைய கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) உங்கள் வங்கிக்கு அனுப்புகிறீர்கள் என்றால், அந்தக் கடவுச்சொல் முதலில் மறைகுறியாக்கப்படும் (Encrypted). அதாவது, யாரும் அதை நேரடியாகப் படிக்கமுடியாதபடி மாற்றப்படும். அதன்பிறகு, மறைகுறியாக்கப்பட்ட கடவுச்சொல் VPN உருவாக்கிய ரகசியப் பாதையின்வழியாக VPN சேவையகத்துக்குச் செல்லும், அங்கு அது படிக்கும்படி மாற்றப்பட்டு வங்கிக்குச் செல்லும். வங்கியிலிருந்து ஏதாவது பதில் வந்தால், அதுவும் இதேபோல் ரகசியமாக உங்கள் கருவிக்கு வந்துசேரும். இந்தப் பரிமாற்றத்தைச் சுற்றியிருக்கிற யாரும் பார்க்கமுடியாது. ஒருவேளை பார்த்தாலும், அவர்களுக்கு அது புரியாது, பயன்படாது.

இணையப் பரிமாற்றங்களின்போது தகவல்களைத் திருடும் முயற்சிகள் மிகுதியாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், முதன்மையான தகவல்கள் எவற்றையும் VPN துணையின்றி அனுப்பவேண்டாம் என்று நிறுவனங்கள் சொல்கின்றன.

அலுவல் பரிமாற்றங்களுக்குமட்டுமின்றி, பொதுவான இணையப் பயன்பாட்டுக்குக்கூட VPNஐப் பயன்படுத்தும் மக்கள் இருக்கிறார்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT