மனிதர்களைப் போலவே பேசும் ஏஐ வாய்ஸ் கிளோனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்போது புதிதாக மோசடிக்காரர்கள் ஏமாற்றி வருகின்றனர். இந்தத் தொழில்நுட்பம் மூலமாக ஒரு நபரின் நெருங்கியவர்களைப் போல போலியாக நடித்து அவர்களின் தனி விவரங்கள் மற்றும் பணத்தை திருடி வரும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடிகளில் இருந்து எப்படி ஜாக்கிரதையாக இருப்பது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஏதிலெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
உங்களுடைய நண்பர்கள் அல்லது உங்களுடன் பணிபுரி அவர்களிடமிருந்து திடீரென வழக்கத்திற்கு மாறாக போன் கால் வந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். முதலில் அவர்கள் உண்மையான நபர்தானா என்பதை உறுதி செய்து கொண்டு மேற்கொண்டு பேசுங்கள்.
உங்களுக்கு தெரிந்த நபராக இருந்தாலும் அவசரப்படுத்தி ஏதாவது விரைவான முடிவுகளை எடுக்க அழுத்தம் கொடுத்தால், அதை தவிர்ப்பது நல்லது.
சில சமயங்களில் உங்களுக்கு நன்கு பரிசயமானவர் மிகப் பெரிய பிரச்சனையில் இருப்பதாக அழைப்பு வந்து, அவசர அவசரமாக உங்களிடம் பணத்தை எதிர்பார்த்து பேசினால் நம்பாதீர்கள்.
என்னதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த நபர் போலவே வாய்ஸ் கிளோனிங் செய்து பேசினாலும், அதன் துல்லியத்தன்மை சரியாக இருக்காது. எனவே உங்களுக்கு நெருங்கிய நண்பர் பேசுவது உங்களுக்கு செயற்கையாக தெரிந்தால் கவனமாக இருங்கள்.
குறிப்பாக இதுபோன்ற அழைப்புகளிடம் உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பகிராதீர்கள். எந்த நிறுவனமும் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை போனில் அழைத்து கேட்க மாட்டார்கள்.
இந்த மோசடியில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது?
திடீரென தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வந்து, உங்களுக்கு தெரிந்த நபர் போலவே பேசினால் அதுபோன்ற கால்களுக்கு முடிந்தவரை பதில் அளிக்க வேண்டாம்.
உங்களிடம் பேசும் நபர் உண்மையிலேயே உங்களுக்கு தெரிந்த நபர் தானா என்பதை சரி பாருங்கள். உதாரணத்திற்கு நீங்கள் சமீபத்தில் அவர்களுடன் இருந்த தருணத்தைப் பற்றி பேசி, அவர்களுக்கும் அது தெரிகிறதா என்பதை கவனியுங்கள்.
உடனடியாக முடிவு எடுக்கும்படி நிர்பந்தித்து உங்கள் விவரங்களை பெற முயற்சித்தால் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள். குறிப்பாக இணையத்தில் உங்களை சார்ந்த விவரங்களை ஷேர் செய்யாமல் இருப்பது நல்லது.
ஒருவேளை நீங்கள் இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட நபராக இருந்தால் உடனடியாக எதற்கும் பயப்படாமல் போலீசில் புகார் அளிப்பது நல்லது.