உங்கள் பைக்கின் மைலேஜை குறைய விடாமல் தடுக்கவும், சீராக ஒரே அளவில் பராமரிக்கவும் வாகன ஓட்டிகளுக்கான டிப்ஸ் இதோ!
இருசக்கர வாகனம் வைத்திருக்கும் அனைவருக்கும் எப்போதுமே ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கும். நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல் விலை மற்றும் பைக் தரும் குறைவான மைலேஜ் தான் அது. புதியதாக ஒருவர் பைக் வாங்கினால் தொடக்கத்தில் ஓரளவு நல்ல மைலேஜ் தரும். ஆனால், வண்டியின் ஓட்டம் அதிகரிக்கத் தொடங்கியதும் மைலேஜ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடுவது இயல்பு தான். பலருக்கும் இதுபற்றிய கவலை இருந்தாலும், இதனை சரிசெய்ய யாரும் முன்வருவதில்லை. மைலேஜை சீராக பராமரிக்க நீங்கள் நேரத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை. அதற்கேற்ற சில வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே போதும் மைலேஜ் குறைவதைத் தடுத்து விட முடியும்.
ஒரே பெட்ரோல் பங்க்:
பொதுவாக பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு எதுவென்றால், பல பெட்ரோல் பங்குகளில் மாறி மாறி பெட்ரோல் போடுவது தான். பல்வேறு தனியார் பெட்ரோல் பங்குகள் உள்ள நிலையில், நீங்கள் தொடக்கத்தில் இருந்தே ஒரே நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட்டு வந்தால், என்ஜின் நன்றாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு பெட்ரோல் நிறுவனத்திற்கு ஏற்ப பெட்ரோலின் அடர்த்தி மாறும் என்பதால், இனியாவது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்குகளைப் பயன்படுத்துங்கள். இப்போது வருகின்ற பைக்குகளில் சென்சார் வசதிகள் இருப்பதால், குறைந்தபட்ச பெட்ரோல் இருப்பு இருக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் உங்களுக்குத் தான் வீண் செலவை ஏற்படுத்தி விடும்.
காற்று நிரப்புதல்:
உங்கள் பைக்கில் உள்ள இரண்டு டயர்களிலும் உள்ள காற்றின் அளவை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளுங்கள். காற்றின் அளவு குறைவாக இருந்தாலும் மைலேஜ் குறைந்து விடும். முன் டயருக்கு 35 மற்றும் பின் டயருக்கு 40 என்ற அளவில் சராசரியாக காற்று நிரப்பப்படுகிறது. அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் காற்றை இலவசமாக நிரப்பிக் கொள்ளும் வசதி இருப்பதால், இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மிதமான வேகம்:
அதிவேகம் ஆபத்து மட்டுமல்ல, மைலேஜையும் குறைத்து விடும். மிதமான வேகத்தில் சென்றால் பைக் என்ஜின் விரைவில் சூடாவது தவிர்க்கப்படும். மேலும் மைலேஜின் அளவும் குறையாது.
கியர் மாற்றுதல்:
வண்டியின் வேகத்திற்கு ஏற்ப 4, 5, மற்றும் 6 கியர் பைக்குகள் தற்போது சந்தையில் விற்பனையாகி வருகிறது. கியரை மாற்றாமல் பைக்கை ஓட்ட முடியாது. இருப்பினும் தேவையற்ற இடங்களில் கியரை மாற்றுவதை தவிர்ப்பது மைலேஜை சீராக பராமரிக்க உதவும்.
செயின் பிளேட்:
பைக்கின் நகர்வுக்கு முக்கிய காரணமே செயின் பிளேட் தான். ஓட்டத்திற்கு ஏற்ப செயின் பிளேட் கொஞ்சம் கொஞ்சமாக தளர ஆரம்பிக்கும். இதுபோன்ற சூழலில் மைலேஜ் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகையால், 3 மாதத்திற்கு ஒருமுறை செயின் பிளேட்டை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
என்ஜின் ஆயில்:
வண்டியின் ஓட்டத்திற்கு ஏற்ப குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். இல்லையேல் மைலேஜ் குறைவதோடு, என்ஜினிலும் பாதிப்பை ஏற்படுத்தி அதிக செலவு வைத்து விடும்.
அதிக எடை:
ஒரே பைக்கில் மூன்று பேர் மற்றும் நான்கு பேர் பயணிப்பதை நாம் பார்த்திருப்போம் அல்லவா! இதனால் உங்கள் பைக் சுமக்கும் எடையின் அளவு அதிகரித்து, மைலேஜ் கண்டிப்பாக குறையும். ஆகையால், பைக்கில் இருவர் மட்டுமே பயணம் செய்தால் மைலேஜை சீராக பராமரிக்க முடியும்.