50 ஆண்டுகள் வரை சார்ஜ் போடாமல் பயன்படுத்தக்கூடிய பேட்டரியை சீன நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று முற்றிலும் புதிய வகை பேட்டரியை தாங்கள் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த பேட்டரியானது 50 ஆண்டுகள் வரை தொடர்ந்து உழைக்கும் என்றும், சராசரியாக நாம் பயன்படுத்தும் பேட்டரிகளை போல இதற்கு அடிக்கடி சார்ஜ் போடவோ அல்லது பராமரிக்கவோ தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
63 நியூக்ளியர் ஐசோடோப்களை ஒரு சிறிய தொகுதியில் வைத்து, அணுசக்தி மூலமாக ஆற்றல் உண்டாக்குவதை முதல் முறையாக பேட்டரியாக உருவாக்கியுள்ளது சீனாவின் Betavolt நிறுவனம். இந்த அடுத்த ஜெனரேஷன் பேட்டரி ஏற்கனவே சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளதால், இது முழு வெற்றியடைந்ததும் ட்ரோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் படி தயாரிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
குறிப்பாக மருத்துவ சாதனங்கள் விண்வெளி ஏ ஐ சாதனங்கள் சென்சார்கள் மைக்ரோ ரோபோக்கள் போன்ற விஷயங்களில் இந்த அணுசக்தி பேட்டரி நீண்ட காலம் எந்த இடையூறுமின்றி வேலை செய்யும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலமாக தொழில்நுட்ப புரட்சியில் சீனா முன்னிலை வகிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது Betavolt நிறுவனம்.
இந்த பேட்டரியின் சிறப்புகள் எனப் பார்க்கும்போது 15×15×5 கன மில்லிமீட்டர் அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தொடர்ச்சியாக 100 மைக்ரோ வாட் மற்றும் 3V வழங்க முடியும். இருப்பினும் இதன் ஆற்றல் 2025 ஆம் ஆண்டுக்குள் 1 Watt அளவு இருக்கும்படி தயாரிப்பது அந்நிறுவனத்தின் இலக்காக உள்ளது. இவை சிறிய அளவிலேயே இருப்பதால் கூடுதல் ஆற்றலை உருவாக்க பேட்டரிகளை ஒன்றாக இணைப்பது சுலபமாகும்.
குறிப்பாக இந்த பேட்டரிகள் அவ்வளவு எளிதில் தீப்பிடிக்காது, அதிக ஆற்றலால் வெடிக்காது. சுமார் 120 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்திலும் இந்த பேட்டரி சிறப்பாக வேலை செய்யும் என சொல்லப்படுகிறது. எனவே இந்த பேட்டரிகள் எதிர்காலத்தில் பல சாதனங்களில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.