‘குளோபல் ஸ்கேன் மெசேஜ்’ எனப்படும் ஆய்வை, ‘McAfee’ என்கிற இணைய பாதுகாப்பு நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு 12 போலி மெசேஜ்களை இந்தியர்கள் பெறுகிறார்கள் என்பதுதான் அந்த உண்மை.
இத்தகைய போலி மெசேஜ்கள் SMS, வாட்ஸ் அப், சோசியல் மீடியா, இமெயில் போன்ற தளங்கள் வழியாகவே வந்துள்ளன. இவற்றை 82 சதவீத இந்தியர்கள் கிளிக் செய்கிறார்கள் அல்லது பலவிதமான மோசடிகளில் சிக்கி தவிக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஸ்மார்ட்போன் பயனர்களை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்வதாகும்.
இந்த நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வானது, ஒரு ஸ்மார்ட் ஃபோனை ஹேக் செய்யும் நோக்கத்தில் இணையம் வழியாக பணத்தை பறிப்பதற்காக அனுப்பப்படும் SMS, வாட்ஸ் அப் போன்றவற்றில் இடம்பெறும் ஏழு ஆபத்து நிறைந்த வரிகளையும் குறிப்பிட்டுள்ளது.
இதில் முதலாவதாக நீங்கள் ஒரு பரிசை வென்றுள்ளீர்கள் என்ற மெசேஜ் உள்ளது. இந்த மெசேஜை எதிர்கொள்ளாத ஸ்மார்ட்போன் பயனர்களே இருக்க முடியாது எனலாம். இந்த மெசேஜில் பெரும்பாலும், ‘வாழ்த்துக்கள்! நீங்கள் இலவச பரிசை வென்றுள்ளீர்கள். அதைப் பெறுவதற்கு உங்களுடைய விவரங்களை எங்களுடன் பகிர இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என பல போலியான மெசேஜ்கள் வரும். இது முழுக்க முழுக்க உங்களின் பணத்தை திருடுவதற்கான நோக்கத்தின் யுக்திதான்.
இரண்டாவது OTT தளங்களுக்கான அப்டேட் வந்துள்ளது என்ற மெசேஜ்கள்.
நீங்கள் இணையத்தில் ஆர்டர் செய்யாத அல்லது வாங்காத ஒரு பொருள் பற்றிய மெசேஜ்கள் அனைத்துமே மோசடிதான்.
போலி வேலை வாய்ப்பு அறிவிப்புகள். இது மற்றொரு வகையான மிகவும் ஆபத்தான மெசேஜ் வகையாகும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் எந்த வேலைக்கும் அப்ளை செய்யாமல் உங்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது என வரும் மெசேஜ்களில் 99 சதவீதம் மோசடியாகவே இருக்கும்.
உங்களுடைய KYC பூர்த்தி செய்யுங்கள் என வரும் பேங்க் அலர்ட் செய்திகள்.
நீங்கள் ஆர்டர் செய்யாத பொருள் பற்றிய டெலிவரி விவரங்களைக் கேட்பது போன்ற அறிவிப்புகள்.
அமேசான் அக்கௌன்ட் அப்டேட் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் அதன் செக்யூரிட்டி சார்ந்த அறிவிப்புகள்.
இதுபோன்ற மெசேஜ்கள் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வந்தால், தயவுசெய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை தொட்டு உள்ளே சென்று விடாதீர்கள். இவை 99 சதவீதம் உங்களை ஏமாற்ற நினைக்கும் ஹேக்கர்களின் வேலையாகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.