boAT என்ற எலக்ட்ரானிக் நிறுவனம் இந்தியாவில் ஏர்பாட்ஸ், ஹெட் போன்ஸ், ஸ்மார்ட் வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்நிறுவன பொருட்களை மக்கள் அதிக அளவில் நம்பி வாங்குவதால் இந்நிறுவனத்திற்கென தனி மார்க்கெட் இருக்கிறது. ஆனால் இப்போது, இந்நிறுவனம் ப்ராடக்டுகளை வாங்கிய லட்சக்கணக்கான நபர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் போட் நிறுவனத்தின் ஏதேனும் ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தை பயன்படுத்தி வந்தால், ஒருவேளை உங்களது தனிப்பட்ட விவரங்களும் திருடப்பட்டிருக்கலாம். இந்த சம்பவம் குறித்து போட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி பார்த்தால், அந்நிறுவனம் மிகப்பெரிய சைபர் தாக்குதலை சந்தித்துள்ளது என்பது தெரியவருகிறது. இந்த சைபர் தாக்குதலில் கிட்டத்தட்ட 75 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஃபோர்ப்ஸ் இந்தியா செய்தியில் வெளிவந்துள்ளது.
இந்த சைபர் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் முகவரி, பெயர், செல்போன் எண்கள், கஸ்டமர் ஐடி மற்றும் அவர்களின் இமெயில் ஐடி போன்ற தகவல்கள் மொத்தமாக திருடப்பட்டுள்ளன. இது தவிர திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் இணையத்தில் திருட்டுத்தனமாக பொருட்கள் விற்பனையாகும் டார்க் வெப் இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஹேக்கர் ஒருவர் போட் நிறுவனத்தின் இணையதளத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில், அந்த இணையதளத்தில் இருந்த 2 ஜிபி அளவிலான வாடிக்கையாளர் தகவல்கள் அடங்கிய டேட்டா மொத்தமாகத் திருடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே போட் நிறுவன தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் நிலையில், இப்போது அந்நிறுவன பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மூலமாக போட் நிறுவனத்தின் நற்பெயர் கெட்டுப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருடப்பட்ட தகவல்களில் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்களும் இடம் பெற்றிருப்பதால், போட் நிறுவனத் தயாரிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.