Anti-sucide blue LED lights 
அறிவியல் / தொழில்நுட்பம்

Nudge technique - நீல நிற விளக்குகளால் தற்கொலையைத் தடுக்க முடியுமா?

மணிமேகலை பெரியசாமி

இரயில் நிலையங்களில் நடைபெறும் தற்கொலைகள் உலகளவில் பெரும் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.  'தற்கொலை இரயில் நிலையம்' என்ற பெயரால்  அழைக்கப்படும் இடங்களும் உள்ளன. அதிலும் குறிப்பாக, ஜப்பானில் இரயில் நிலையங்களில் தற்கொலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்கும் வகையில், ஜப்பானில் சில ரயில் நிலையங்கள் நீல நிற LED விளக்குகளை நடைமேடைகளில் நிறுவியுள்ளன. 

கடந்த 2009 ஆம் ஆண்டில் டோக்கியோவின் யமனோட் ரயில் பாதையில் இந்த நீல நிற LED விளக்குகள் முதன்முதலில் நிறுவப்பட்டன. தற்கொலையைத் தடுக்கும் தடுப்புக் கம்பிகளை விட, இந்த LED விளக்குகளை ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் செல்லும் பாதையில் பொருத்துவதற்கு மிகக் குறைந்த அளவே செலவு ஆகும் எனக் கூறப்படுகிறது. இந்த எளிய மாற்றம், மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜர்னல் ஆஃப் அஃபெக்டிவ் டிஸார்டரில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில் நீல நிற விளக்குகள் பொருத்தப்பட்ட ரயில் நிலையங்களில், தற்கொலைகள் 84% குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல ஆய்வுகள் இது தொடர்பாக நடத்தப்பட்டன. இவ்வாறு, நீல நிற விளக்குகள் மூலம் ரயில் நிலையங்களில் நடைபெறும் தற்கொலைகளைத் தடுக்கும் அணுகுமுறை 'நட்ஜ் தொழில்நுட்பம் (Nudge technique)' என்று அழைக்கப்படும்.  நட்ஜ் தொழில்நுட்பம் என்பது ஒரு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட, மக்களின் நடத்தையை பாதிக்கக்கூடிய ஒரு நுட்பமாக கருதப்படுகிறது.

இந்த அணுகுமுறை, ரயில்நிலையங்களில் தற்கொலைகளைத் தடுப்பதற்கான ஒரு புதிய வழியாக பல நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. ஜப்பானைத் தொடர்ந்து, உலகில் உள்ள பிற நாடுகள் இரயில்  நிலையங்களில் நீல நிற விளக்குகளை நிறுவத் திட்டமிட்டு வருகின்றன.

இதற்கான காரணம், முழுமையாக, அறிவியல் பூர்வமாக அறியப்படவில்லை. இருப்பினும், இது குறித்து உளவியல் ரீதியாக சில யோசனைகளும், கோட்பாடுகளும் நிலவி வருகின்றன. 

இது, மனநிலை மற்றும் ஒளி தொடர்பான, வெளிப்படையான, நேர்மறையான விளைவுடன் தொடர்புடையது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

நீல நிறம் மனத்திற்கு இனிய நிறமாக இருக்கலாம். மனதில் ஏற்படும் உணர்வு ரீதியான கிளர்ச்சிகளையும், உணர்ப்பூர்வமான செயல்களையும் குறைக்கலாம். நீல நிற ஒளி மனதிற்கு அமைதியை தரக்கூடிய நிறமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. 

நீல நிற ஒளி தெளிவாக இருக்காது. நீல நிற விளக்கொளியில் தடங்கள் அல்லது பாதைகளை தெளிவாகப் பார்க்க முடியாது. இதனால், தற்கொலை செய்யும் மக்கள் இடைநிறுத்தப்படுகிறார்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

காரணம் எதுவாக இருந்தாலும், மிகச்சிறிய, எளிமையான,  விலைக் குறைவானத் தீர்வுகளும் கூட, மக்களின் பொதுப் பாதுகாப்பில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதற்கு இந்த அணுகுமுறை சிறந்த சான்றாக விளங்குகிறது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT