Car AC 
அறிவியல் / தொழில்நுட்பம்

காரில் ஏசி போட்டு தூங்கலாமா? உஷாரா இருங்க!

ரா.வ.பாலகிருஷ்ணன்

கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், அக்னி நட்சத்திரமும் தொடங்கி வெயில் வாட்டுகிறது. கோடை வெயிலை சமாளிக்க அதிகம் பேர் ஏசியை நாடிச் செல்கின்றனர். ஆண்டுதோறும் கோடையில் ஏசியின் விற்பனை அதிகரித்து வருவதில் இருந்தே வெயிலின் தாக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது விற்பனையாகும் கார்களில் கூட ஏசி இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது. சிலர், குறிப்பாக டாக்ஸி ஓட்டுனர்கள், கார்களில் ஏசியை போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுகின்றனர். இப்பழக்கம் நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.

கோடையில் தொடர் வெயிலால், மின்தேவை அதிகமாக இருக்கும். இதனை ஈடு செய்யவும், மின்சார இருப்பை அதிகரிக்கவும் பல நடவடிக்கைகள் மின்சாரத் துறையால் எடுக்கப்படுகிறது. இருப்பினும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். தொடர் மின்வெட்டின் காரணமாக ஏசி இயந்திரம் பழுதடையவும் வாய்ப்புள்ளது. இதனால், இரவு நேரங்களில் சிலர் கார்களில் இருக்கும் ஏசியை ஆன் செய்து, அப்படியே தூங்கி விடுகின்றனர்.

பொதுவாக காரில் பயணிக்கும் போது தான் ஏசியை அதிகமாக பயன்படுத்துவார்கள். ஆனால், கோடை வெயிலின் தாக்கத்தினால் ஓய்வெடுக்கும் நேரங்களில் கூட காரில் உள்ள ஏசி பயன்படுத்தப்படுகிறது. இப்பழக்கத்தை சிலர் எல்லா நேரங்களிலும் கடைபிடிக்கின்றனர். இதனால் மூச்சுத் திணறல் வரும் அபாயம் அதிகமாக உள்ளது என ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் எத்தரித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஈரோட்டில் சாலையோரமாக காரை நிறுத்தி, ஏசியை ஆன் செய்து தூங்கிய ஒரு நபர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஆகையால் இப்பழக்கத்தின் விளைவை பொதுமக்கள் உணர்ந்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏசி ஒரு எலக்ட்ரானிக் இயந்திரம். ஆதலால், இதனை அனைவரும் கவனமுடன் கையாள வேண்டியது அவசியமாகும்.

கார் என்ஜின் இயக்கத்தில் இருக்கையில் வெளிப்படும் புகையில் கார்பன் மோனாக்ஸைடு கலந்திருக்கும். இவ்வாறு வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்ஸைடு, காரின் அடிப்பகுதியின் வழியாக உள்ளே நுழைய அதிக வாய்ப்புள்ளது. காருக்குள்ளே வருகின்ற கார்பன் மோனாக்ஸைடை நாம் சுவாசித்தால், இரத்தத்தில் இருக்கும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனின் அளவு குறைவாகக் கிடைக்கும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அது உயிரைப் பறிக்கும் எமனாக மாறி விடும்.

காரில் ஏசியை ஆன் செய்து தூங்குவதாக இருந்தால், வெளியில் இருந்து காற்று சிறிதளவு உள்ளே வருகின்ற வகையில் கண்ணாடியை சற்று இறக்கி வைக்க வேண்டும். வெளியில் இருந்து காற்று உள்ளே வரும் போது, கார்பன் மோனாக்ஸைடினால் உண்டாகும் நச்சுப் பாதிப்பு சற்றேனும் குறையும். மேலும், நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏசியைப் பயன்படுத்தும் போது ‘ரீ சர்குலேஷன் மோடில்’ வைப்பதை தவிர்த்து விட வேண்டும்.

கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்தால் ஏசியை நாடிச் செல்லும் பொதுமக்கள், இயற்கைக் காற்றை வரமாய் அளிக்கும் மரங்களை நடுவதில் கவனம் செலுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும்; கோடை வெப்பத்தில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT