உடனடி தகவலை அனுப்பும் மெசேஜிங் தளமான வாட்ஸ் அப்பை, யாரும் முழுமையாக நம்ப வேண்டாம் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றும் 'போர்ட் டப்ரி' என்பவர் தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது வாட்ஸ் அப் செயலியானது அவரது ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை அணுகியதைக் கண்டறிந்து, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார். அதிகாலை 4.20 மணி முதல், 6.53 மணி வரை வாட்ஸாப் செயலி எனது ஸ்மார்ட்போனை இயக்கியிருக்கிறது. இங்கே என்ன நடக்கிறது? என அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதைப் பார்த்த ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க், அவருக்கு ரிப்ளை செய்யும் விதமாக, "வாட்ஸ் அப்பை முழுமையாக நம்ப முடியாது" என ரீட்வீட் செய்துள்ளார். வாட்ஸ்அப் மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு அதன் பயனர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒருவேளை வாட்ஸ் அப் நம்மை ஒட்டுக்கேட்கிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவிக்கையில், "இந்த பிரச்சனையானது ஆண்ட்ராய்டில் உருவான ஒரு பக்கினால் ஏற்பட்டதாகும். அதுதான் தகவல்களை தவறாகக் குறிப்பிடுவதற்கு காரணம்" என வாட்ஸ் அப் நிறுவனமும் ட்வீட் செய்துள்ளது. மேலும் தாங்கள் ஒட்டுக்கேட்பதாக குற்றம் சாட்டியவர் பயன்படுத்திய ஸ்மார்ட்போன், கூகுள் பிக்சல் எனவும், எனவே இந்த பிரச்சினையை பற்றி ஆராய்ந்து அதற்கான தீர்வு குறித்து கூகுளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வாட்ஸ் அப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் பதிவிட்ட மற்றொரு ட்வீட்டில், தங்களின் மைக்ரோபோன் செட்டிங் மீதான முழு கட்டுப்பாட்டையும், வாட்ஸ் அப் பயனர்கள் முழுமையாகக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் வாய்ஸ் நோட் அனுப்பும்போது, வாய்ஸ் கால் செய்யும் போது அல்லது வீடியோ ரெக்கார்ட் செய்யும்போது மட்டுமே whatsapp செயலியால் மைக்ரோஃபோனை அணுக முடியும் என்றும், whatsapp திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது.
இப்படி தொழில்நுட்ப ஜாம்பவானான எலான் மஸ்கே வாட்ஸ் அப்பை நம்ப வேண்டாம் என கூறியிருப்பது, மக்கள் மத்தியில் வாட்ஸ் அப் நிறுவனம் மீதான சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.