அறிவியல் / தொழில்நுட்பம்

காயங்களை விரைவாக குணப்படுத்தும் எலக்ட்ரானிக் பேண்டேஜ்.

கிரி கணபதி

நாள்பட்ட காயங்களைக் குணப்படுத்த, நெகிழ்வான, பேட்டரி இல்லாத E-பேண்டேஜ் என்ற சாதனம் உதவும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மின்சாரம், எலக்ட்ரிக் பொருட்களை இயக்குவது மட்டுமின்றி, மக்களின் காயங்களை குணப்படுத்தவும் இனி பயன்படப்போகிறது. காயத்தின் மீது எலக்ட்ரிக் சிக்னலைப் பயன்படுத்தி, 30 சதவீதம் வரை வேகமாக காயத்தை குணப்படுத்தும் எலக்ட்ரானிக் பேண்டேஜ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் மின்சாரம் இதயத் துடிப்புக்கு உதவி, தசைகளைச் சுருங்கி விரியச் செய்து, உடல் மூளையுடன் தொடர்பு கொள்ளப் பயன்படுகிறது. 

ஆராய்ச்சியாளர்கள் மக்களின் நாள்பட்ட காயங்கள் மீது கவனம் செலுத்தி, புதிய ஆய்வு ஒன்று மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக நீரிழிவு நோயால் நாள்பட்ட காயங்கள் அதிகமாக ஏற்படுவதால், அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 327 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மருத்துவ செலவு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செலவின் அளவு 1 பில்லியன் டாலர் என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது கணிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களில் சுமார் 15 முதல் 20 சதவீத மக்கள், கால் புண்களால் கஷ்டப்படுகின்றனர். மேலும் விபத்து காரணமாகவும் சிலருக்கு நாள்பட்ட காயங்கள் ஏற்படுகிறது. நீரிழிவு நோயானது நரம்புகளில் சேதத்தை ஏற்படுத்தி உணர்வின்மைக்கு வழிவகுக்கும் என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறிய கொப்பளமோ அல்லது கீறல் ஏற்பட்டாலும் கூட, அது கவனிக்கப்படாமல் இருந்தால் மிகப்பெரிய காயமாக மாறிவிடும். 

எனவே இதுபோன்ற நாள்பட்ட காயங்களை சரி செய்ய எலக்ட்ரோ தெரபி உதவுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிய விரும்பினர். இந்த காயங்களுடன் தொடர்புடைய வீக்கம், உடலில் இயல்பான மின் சிக்னல்களை சீர்குலைத்து காயம் குணமடையும் செயல்முறையை கடினமாக்குகிறது. இது சார்ந்த முந்தைய சில ஆராய்ச்சிகளிலேயே மின்சாரத்தைப் பயன்படுத்தி காயங்களை ஆற்றலாம் என்பது கண்டுபிடிக்கப் பட்டாலும், எலக்ட்ரோ தெரபி சாதனங்கள் பெரும்பாலும் பெரிய அளவில் இருந்தது. இதை மருத்துவர்களின் மேற்பார்வையின்றி யாரும் பயன்படுத்த முடியாது. எனவே புதிய ஆய்வில் எல்லா நேரங்களிலும் மக்களே பயன்படுத்தக்கூடிய மின்னணு சிகிச்சையை உருவாக்குவதை விஞ்ஞானிகள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். 

எனவே, நெகிழ்வான நீடிக்கக்கூடிய பேட்டரி இல்லாத எலக்ட்ரானிக் பாண்டேஜ் கண்டுபிடிக்கப்பட்டது. இது காயம் ஏற்பட்ட இடங்களைச் சுற்றி மென்மையாக பற்றிக்கொள்கிறது. இந்த பாண்டேஜ் உடலால் உறிஞ்சப்படும் திறன் கொண்டதால், காயங்களை விரைவாக குணப்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. இந்த பேண்டேஜுக்குத் தேவையான மின்சாரம், வயர்லெஸ் வழியாகக் கொடுக்கப்படுகிறது. 

விஞ்ஞானிகள் இப்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் புண்களில் இந்த சாதனத்தை சோதிக்கத் திட்டமிட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் மருத்துவத் துறையில் இது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

"திரையில் வீரத்தை காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல" வெப்பன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேச்சு!

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!

முட்டி கொண்ட கமலா - ஈஸ்வரி... ராதிகா வீட்டில் அடுத்து என்ன நடக்கும்? பாக்கியலட்சுமி அப்டேட்!

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி!

காலையில் எழுந்ததும் வேம்பு நீர் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!

SCROLL FOR NEXT