அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்த முயற்சியில் அவ்வப்போது ஒவ்வொரு புதுமையை அறிமுகப்படுத்தி வருகிறார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க். இவர் தற்போது நியூராலிங்க் (Neuralink) என்ற மனித மூளை - கணினி இடைமுக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தற்போது மனித சிந்தனையின் ஆற்றலால் தொலைபேசி அல்லது கணினியை கட்டுப்படுத்தும் ஓர் கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆராய்ச்சித் தொடர்பான அப்டேட்டுகளை எலான் மஸ்க் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து வருகிறார்.
நியூராலிங்க்:
எலான் மஸ்க், நியூராலிங்க் நிறுவனத்தைக் கடந்த 2016ஆம் ஆண்டு நிறுவினார். இந்த நிறுவனமானது முழுக்க முழுக்க தொழிற்நுட்பத்தின் மூலம் மனித மூளையில் உள்ள நரம்புகளைத் தூண்டும் ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. பக்கவாதம் மற்றும் கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களின் மூளைக்குள் 'சிப்' பொருத்தி, அவர்களை இத்தகைய பாதிப்புகளிலிருந்து குணப்படுத்துவதற்கான நோக்கத்தோடு எலான் மஸ்க் இந்த தீவிரமான ஆராய்ச்சியில் களமிறங்கியுள்ளார்.
நியூராலிங்க் சிப்:
‘நியூராலிங்க் சிப்’ என்பது மனிதர்களின் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும். இந்த சிப் பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் பொருத்தப்படும். இதனால் அந்த நோயாளிகள் அவர்களின் எண்ணங்களின் அடிப்படையில் எழுந்து நடக்க முடியும். அதுமட்டுமின்றி மூளையிலிருந்து வரும் சமிஞ்சைகளைப் பயன்படுத்தி அவர்களால் கம்ப்யூட்டரையும்கூட இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இந்த சிப் மனித மூளையில் பொருத்தப்படும். மேலும் இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பல்வேறு சிகிச்சைகளுக்கும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பத்தின் செயல்பாடு எவ்வாறு இருக்கும்?
எலான் மஸ்க் இந்த கருவியின் தொழிற்நுட்பம் குறித்து கூறுகையில் “நம் கபாலத்துக்குள் ஒரு ஃபிட்பிட் (Fitbit) உபகரணம் போல் நியூராலிங் சிப் செயல்படும். அது மனிதர்களுடைய மூளையின் செயல்பாட்டை தூண்டிவிடும். இதன்மூலம் ஆட்டிசம் மற்றும் மனச்சிதைவு (schizophrenia) நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கூட பயனடையலாம்” என்று கூறியுள்ளார்.
ஆனால் இப்போது இதுகுறித்த சோதனைகள் நடத்தப்பட்டு முன்னேற்றம் கண்டாலும், இதுபோன்ற ஒரு 'சிப்' சந்தைக்கு வர குறைந்தது இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். அதுமட்டுமின்றி இந்த ஆய்வானது இன்னும் சுமார் ஆறு ஆண்டு காலம் வரை மேற்கொள்ளப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
விமர்சனங்களுக்குள் சிக்கிய மஸ்க்:
நியூராலிங்க் நிறுவனம் முதன்முதலில் உருவாக்கிய சிப்பை மனிதர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு முன்பாக குரங்கு உள்ளிட்ட விலங்குகளைக் கொண்டு சோதனையை மேற்கொண்டது. இதுகுறித்த பல கேள்விகள், வழக்குகள் மற்றும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் விமர்சனங்களுக்குள் சிக்கியது.
ஒப்புதலுக்கான அறிவிப்பு:
இந்நிலையில் கடந்தாண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) இருந்து நியூராலிங்க் சிப்பை மனிதமூளைக்குள் பொருத்தும் சோதனைகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதலைத் தொடர்ந்து விலங்குகளை கொண்டு செய்யப்பட்ட சோதனைகளின் வெற்றியைத் தொடர்ந்து மனிதர்களை சோதனைகளுக்காக பயன்படுத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
மனித மூளையில் பொருத்தப்பட்ட சிப்:
கடந்த சில மாதங்களுக்கு முன் 29 வயதான ‘நோலந்த் ஆர்பாக்’ என்ற நபர் விபத்தில் சிக்கி நரம்பியல் செயல்பாடு பாதிக்கப்பட்டது. இவருக்குதான் இந்த நியூராலிங்க் சிப் முதன்முதலில் பொருத்தப்பட்டுள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன்புகூட இவர் நல்ல முறையில் உடல் நலம் தேறி வருவதாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.
சிப் பொருத்தப்பட்ட நபர் தனது சிந்தனைகள் மூலமே கணிணியைக் கட்டுப்படுத்தி ஆன்லைனில் செஸ் கேம் விளையாடும் காட்சிகளை Neuralink நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தற்போது பகிர்ந்துள்ளது. அந்த இளைஞர், சிப் பொருத்தப்பட்ட பிறகு வீடியோ கேம்கள், செஸ் போட்டிகளை விளையாடக்கூடிய திறனை பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.