சாலைப் போக்குவரத்து மற்றும் இரயில் போக்குவரத்து ஆகிய இரண்டைத் தான் இந்தியா முழுவதும் போக்குவரத்திற்காக பொதுமக்கள் பலரும் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில், இவை இரண்டு மட்டுமே சராசரி நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றது. விமானப் போக்குவரத்தில் பயணிக்க கட்டணம் அதிகம் என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் அதன் பக்கமே திரும்ப மாட்டார்கள். அதே சமயம், நீர்வழிப் போக்குவரத்து தற்காலத்தில் முற்றிலும் குறைந்து விட்டதால் அதையும் பொதுமக்கள் நாடுவதில்லை. நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சாலைப் போக்குவரத்தில் அவ்வப்போது பல மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. இருப்பினும், தினசரி போக்குவரத்து நெரிசல் மட்டும் குறையவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை ஐஐடி பறக்கும் டாக்சி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உள்பட சில உலக நாடுகள், தொடர்ச்சியாக புதுப்புது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறது சென்னை ஐஐடி நிறுவனம். இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் சென்னை ஐஐடி என்றாலே, இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் அதற்கென ஒரு தனிப்பெருமை இருக்கிறது. தற்போது சென்னை ஐஐடி, தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பறக்கும் டாக்சியை தயாரித்து வரும் பணியில் இறங்கியுள்ளது. முழுவதுமாக மின்சாரத்தில் இயங்கும் இந்த பறக்கும் டாக்சி பயன்பாட்டுக்கு வந்து விட்டால், உலகிலேயே முதல் பறக்கும் மின்சார டாக்சியாக இது தான் இருக்கும்.
சென்னை ஐஐடி தயாரிக்கும் பறக்கும் டாக்சி 200 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. பறக்கும் டாக்சி மேலே பறக்கவும், கீழே தரையிறங்கவும் 15 அடி அகலமும், 15 அடி நீளமும் உடைய இடம் மட்டும் போதுமானது. இந்த டாக்சி, 2 நபர்கள் அமர்ந்து பயணிக்கும் படி வடிவமைக்கப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு வந்த பின், 25 கிமீ துாரத்தை வெறும் 10 நிமிடங்களிலேயே பயணித்து விடலாம். வெகு விரைவிலேயே பயணிக்கும் வசதி கொண்ட இந்த பறக்கும் டாக்சி விற்பனைக்கு வரும் வேளையில், பலரும் இதனை வாங்க நினைப்பார்கள்.
சென்னை ஐஐடியின் இந்த அளப்பரிய முயற்சிக்கு, மகேந்திரா நிறுவனத் தலைவரான ஆனந்த் மகேந்திரா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டு இருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள் பறக்கும் மின்சார டாக்சியை உருவாக்க உள்ளது. இந்தியா முழுவதும் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை காரணமாக புதுமைப் படைப்பாளிகள் இல்லாத நாடு இந்தியா என யாராலும் இனி கூற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
பறக்கும் டாக்சி நடைமுறைக்கு வந்தாலும், அது நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். ஏனெனில் இதில் பயணம் செய்யும் கட்டணம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இதில் இருவர் தான் பயணிக்க முடியும் என்பதால், ஒருவேளை விற்பனைக்கு வந்தாலும் கூட இதன் விலை அதிகமாக இருக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.