தங்கம் என்பது இந்த மனித குலம் நீண்ட காலமாக மதிப்புமிக்க பொருளாகப் பார்த்து வரும் ஒரு அறிய உலோகம். அதன் மின்னும் தன்மை, மென்மை, அரிப்பைத் தாங்கும் திறன் ஆகியவற்றால் நகைகள், நாணயங்கள் மற்றும் பல்வேறு விதமான தொழில்நுட்பங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த அழகான உலோகம் பூமியில் எப்படி உருவானது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதன் உண்மையை தெரிந்துகொள்ள பிரபஞ்சத்தின் ஆழமான ரகசியங்களை நாம் கொஞ்சம் ஆராய வேண்டும்.
தங்கம் பூமியில் உருவானது அல்ல. உண்மையில் இது பிரபஞ்சத்தின் மிகப்பெரிய நிகழ்வுகளான நட்சத்திரங்களின் மரணம் மற்றும் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதும் நிகழ்வுகளின்போது உருவாகிறது. நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாளின் இறுதியில் சூப்பர்நோவா எனப்படும் பெருவெடிப்பைச் சந்திக்கின்றன. இந்த வெடிப்பின் போது மிக அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் ஏற்படுகிறது. இந்தத் தீவிர சூழலில் இலகுரக தனிமங்கள் இணைந்து கனமான தனிமங்களாக மாறுகின்றன. இந்த செயல்பாட்டின்போது தங்கம் உருவாகிறது.
இதேபோல் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது மிகப்பெரிய அளவில் ஆற்றல் வெளியாகிறது. இந்த ஆற்றல், தங்கம் உட்பட பல கனமான தனிமங்களை உருவாக்குவதற்கு தேவையான சூழலை ஏற்படுத்துகிறது.
பிரபஞ்சத்தில் உருவான தங்கம் பின்னர் விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் மூலம் பூமிக்கு வந்தது. பூமி உருவான ஆரம்ப காலத்தில் ஏராளமான விண்கற்கள் பூமியில் மோதின. இந்த விண்கற்களில் இருந்த தங்கம் பூமியின் உட்பகுதியில் கலந்தது. பின்னர், புமியின் தட்டுகள் நகர்வதாலும், எரிமலை வெடிப்புகளாலும் இந்தத் தங்கம் பூமியின் மேற்பரப்பில் கிடைக்கக்கூடிய தாதுக்களாக மாறியது.
தங்கம் தனது அழகு மற்றும் மதிப்புக்காக மட்டுமின்றி பல்வேறு தொழில்நுட்பங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மின்னணுவியல், மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி உட்பட பல துறைகளில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கத்தின் உயர்ந்த மின் கடத்தும் திறன் அதை மின்னணு சாதனங்களில் பயன்படுத்த ஏற்றதாக மாற்றுகிறது. மேலும், தங்கம் உடலுக்கு எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்தாததால், மருத்துவத்துறையில் இது பலவகையாக பயன்படுத்தப்படுகிறது.