ஏடிஎம் டெபிட் கார்டுகள் இல்லாமல் இனி UPI செயலியை பயன்படுத்தி ஏடிஎம்களிலிருந்து பணம் எடுக்கும் வசதி நாட்டில் முதல்முறையாக மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
UPI பரிவர்த்தனையில் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் NPCI யுடன் இணைந்து டெபிட் கார்டுகள் இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் முறை மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீஸ் என்ற முறையில் ஒயிட் லேபிள் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
ஏடிஎம் டெபிட் கார்டுகள் இல்லாதவர்கள் தங்கள் மொபைல் போனில் உள்ள UPI செயலியை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ஏடிஎம்க்கு சென்று UPI கார்டுலெஸ் சேவையை தேர்வு செய்ய வேண்டும், பிறகு எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்ற தொகையை பதிவு செய்து, ஸ்கிரீனில் தெரியக்கூடிய QR கோடை போனில் ஸ்கேன் செய்ய வேண்டும், பிறகு UPI நம்பரை பதிவு செய்து, பரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும், அடுத்த சில வினாடிகளில் பணம் கிடைக்கும் வகையில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மக்களின் பண பரிவர்த்தனை சேவை மேலும் எளிதாக்கப்பட்டு இருக்கிறது என்று NPCI குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டுகளை இனி எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், வருங்காலத்தில் இந்த நடைமுறை அனைத்து வகை ஏடிஎம்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
UPI பரிவர்த்தனை தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வரக்கூடிய நிலையில் ஏடிஎம்மில் UPI செயலியை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும் என்ற இந்த புதிய நடைமுறை மக்களுக்கு மேலும் பயன் அளிக்கும். மேலும் ஏடிஎம் இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை இது மேலும் எளிதாக்கியிருக்கிறது.